ஆன்லைனில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதற்கு உதவக்கூடிய உதவிக்குறிப்புகள்

வலிமையான கடவுச்சொற்களை உருவாக்குவது, சாதனங்களைப் பாதுகாப்பது, ஃபிஷிங் தாக்குதல்களைத் தவிர்ப்பது, இணையத்தில் பாதுகாப்பாக உலாவுவது ஆகியவற்றுக்கான சில விரைவு உதவிக்குறிப்புகளையும் சிறந்த நடைமுறைகளையும் தொகுத்து வழங்கியுள்ளோம்.

உங்கள் கணக்கின் பாதுகாப்புக்கு வலுவூட்டவும்

 • பாதுகாப்புச் சோதனையை மேற்கொள்ளுதல்

  பாதுகாப்புச் சரிபார்ப்பை மேற்கொள்வதே Google கணக்கைப் பாதுகாப்பதற்கான எளிய வழியாகும். உங்கள் Google கணக்கின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு உதவும் தனிப்பயனாக்கிய மற்றும் செயல்படுத்தக்கூடிய பாதுகாப்புப் பரிந்துரைகளை உங்களுக்கு வழங்க, படிப்படியான வழிமுறைகள் அடங்கிய இந்தக் கருவியை உருவாக்கியுள்ளோம்.

 • வலிமையான கடவுச்சொற்களை உருவாக்குதல்

  உங்கள் ஆன்லைன் கணக்குகளைப் பாதுகாப்பதற்கு, வலிமையான, தனிப்பட்ட கடவுச்சொல்லை உருவாக்குவது மிகவும் முக்கியமான படிகளில் ஒன்றாகும். இதைச் செய்ய நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய சொற்றொடர்களைப் பயன்படுத்தலாம். ஆனால், அது பிறர் யூகிப்பதற்குக் கடினமாக இருக்க வேண்டும். அல்லது ஒரு நீண்ட வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தையும் பயன்படுத்தி, கடவுச்சொல்லை உருவாக்கலாம். அதில் குறைந்தது எட்டு எழுத்துகள் இருக்குமாறு அமைத்து, இன்னும் வலிமையாக்கலாம். நீளமான கடவுச்சொல்லே வலிமையான கடவுச்சொல்லாகும்.

  பாதுகாப்புக் கேள்விகளுக்குப் பதில்களை உருவாக்கும் போது, போலியான பதில்களைப் பயன்படுத்தி கடவுச்சொல்லை யூகிப்பதை இன்னும் கடினமாக்கவும்.

 • ஒவ்வொரு கணக்கிற்கும் தனிப்பட்ட கடவுச்சொற்களைப் பயன்படுத்துதல்

  Google கணக்கு, சமூக வலைதளக் கணக்குகள், ரீடெய்ல் இணையதளங்கள் போன்ற பல கணக்குகளில் உள்நுழைவதற்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்தினால், பாதுகாப்பு அபாயம் அதிகரிக்கும். இது உங்கள் வீடு, கார், அலுவலகம் ஆகியவற்றுக்கு ஒரே சாவியைப் பயன்படுத்துவது போன்றதாகும். யாராவது ஒருவர் ஒரு கணக்கிற்கான அணுகலைப் பெற்றுவிட்டால், எல்லா கணக்குகளும் உங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படலாம். ஒவ்வொரு கணக்கிற்கும் தனிப்பட்ட கடவுச்சொல்லை உருவாக்குவது, இந்த அபாயத்தை நீக்கி உங்கள் கணக்கை மேலும் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

 • பல கடவுச்சொற்களையும் நினைவில் வைத்துக்கொள்ளுதல்

  உங்கள் Google கணக்கில் உள்ளதைப் போலவே செயல்படும் கடவுச்சொல் நிர்வாகி ஆப்ஸிலும் இணையதளங்களிலும் நீங்கள் பயன்படுத்தும் கடவுசொற்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் கண்காணிப்பதற்கும் உதவுகிறது. பாதுகாப்பாகவும் எளிதாகவும் உள்நுழைய Googleளின் கடவுச்சொல் நிர்வாகி அம்சம் நீங்கள் சேமித்தக் கடவுச்சொற்களைப் பயன்படுத்துகிறது.

 • இருபடிச் சரிபார்ப்பைப் பயன்படுத்தி ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பாக இருத்தல்

  இருபடிச் சரிபார்ப்பு: நீங்கள் கணக்கில் உள்நுழைவதற்குப் பயன்படுத்தும் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லுடன் சேர்த்து இரண்டாம் நிலைக் காரணியும் அவசியம் என்பதால், உங்கள் கணக்கை அணுகக்கூடாத எவரையும் கணக்கை அணுகவிடாமல் தடுக்க இது உதவும். எடுத்துக்காட்டாக, Google இல் Google அங்கீகரிப்பு ஆப்ஸ் உருவாக்கும் ஆறு இலக்கக் குறியீடாகவோ, நம்பகமான சாதன உள்நுழைவை ஏற்பதற்கு Google ஆப்ஸில் காட்டப்படும் அறிவிப்பாகவோ இது இருக்கும்.

  ஃபிஷிங்கிற்கு எதிரான கூடுதல் பாதுகாப்பிற்கு, உங்கள் கம்ப்யூட்டரின் USB ஃபோர்ட்டில் செருகக்கூடிய அல்லது குறுவெளித் தகவல் பரிமாற்றம் (NFC) அல்லது புளூடூத்தைப் பயன்படுத்தி உங்கள் மொபைல் சாதனத்துடன் இணைக்கக்கூடிய பாதுகாப்புச் சாவியை வாங்கவும். ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல் பிரச்சாரக் குழுக்கள் உட்பட அதிக மையப்படுத்தப்பட்ட தாக்குதல்களின் ஆபத்தில் உள்ளதாகக் கருதுபவர்களுக்கு, இருபடிச் சரிபார்ப்பின் ஒரே வடிவமாகப் பாதுகாப்புச் சாவியைப் பயன்படுத்துவதைச் செயலாக்குவதன் மூலம், ஃபிஷிங்கிற்கு எதிரான Google இன் வலுவான பாதுகாப்பை மேம்பட்ட பாதுகாப்புத் திட்டம் வழங்குகிறது.

உங்கள் சாதனங்களைப் பாதுகாக்கவும்

 • மென்பொருளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருத்தல்

  பாதுகாப்பு தொடர்பான பாதிப்புகளிலிருந்து உங்கள் கணக்கைப் பாதுகாக்க, உங்கள் இணைய உலாவி, ஆப்ரேட்டிங் சிஸ்டம், செருகுநிரல்கள், ஆவண எடிட்டர்கள் ஆகிய அனைத்திற்கும் சமீபத்திய பதிப்பிலான மென்பொருளை எப்போதும் பயன்படுத்தவும். உங்கள் மென்பொருளைப் புதுப்பிப்பதற்கான அறிவிப்புகளைப் பெறும் போது, முடிந்தளவுக்கு விரைவில் புதுப்பிக்கவும்.

  எப்போதுமே சமீபத்திய பதிப்பையே பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிசெய்வதற்கு, நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் மென்பொருளை மதிப்பாய்வு செய்யவும். Chrome உலாவி உள்ளிட்ட சில சேவைகள் தானாகவே புதுப்பிக்கப்படும்.

 • உங்கள் மொபைலில், தீங்கிழைப்பதற்குச் சாத்தியமுள்ள ஆப்ஸை முடக்குதல்

  நீங்கள் நம்பும் மூலத்திலிருந்தே எப்போதும் மொபைல் ஆப்ஸைப் பதிவிறக்கவும். Android சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உதவும் வகையில், Google Play ஸ்டோரிலிருந்து ஆப்ஸைப் பதிவிறக்குவதற்கு முன் அவற்றில் பாதுகாப்புச் சரிபார்ப்பை Google Play Protect இயக்கும், மேலும் பிற மூலங்களின் தீங்கிழைக்கக்கூடிய சாத்தியமான ஆப்ஸ் உங்கள் சாதனத்தில் உள்ளனவா என்பதை அடிக்கடிச் சரிபார்க்கும்.

  உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க:

  • உங்கள் ஆப்ஸை மதிப்பாய்வு செய்து, நீங்கள் பயன்படுத்தாதவற்றை நீக்கவும்.
  • உங்கள் ஆப்ஸ்டோர் அமைப்புகளுக்குச் சென்று, தானியங்குப் புதுப்பிப்புகளை இயக்கவும்.
  • நீங்கள் நம்பும் ஆப்ஸுக்கு மட்டும், உங்கள் இருப்பிடம் மற்றும் படங்கள் போன்ற பாதுகாக்க வேண்டிய தகவலுக்கான அணுகலை வழங்கவும்.
 • திரைப் பூட்டைப் பயன்படுத்துதல்

  கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் அல்லது மொபைலைப் பயன்படுத்தாத போது, திரையைப் பூட்டவும். இதன் மூலம் உங்கள் சாதனத்தைப் பிறர் பயன்படுத்துவதைத் தடுக்கலாம். கூடுதல் பாதுகாப்பிற்காக, உறக்கநிலைக்குச் செல்லும் போது தானாகவே பூட்டும் வகையில் உங்கள் சாதனத்தை அமைக்கவும்.

 • உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால், அதைப் பூட்டவும்

  உங்கள் மொபைல் தொலைந்துவிட்டாலோ அல்லது யாரேனும் திருடிவிட்டாலோ எனது Google கணக்கு என்பதற்குச் சென்று, உங்கள் தரவை விரைவான சில வழிமுறைகளில் பாதுகாக்க, "எனது மொபைலைக் கண்டறி" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்களிடம் Android அல்லது iOS சாதனம் என எது இருந்தாலும், உங்கள் மொபைலைத் தொலைநிலையிலிருந்து கண்டறிந்து, பூட்டலாம். இவ்வாறு செய்தால், வேறு எவராலும் உங்கள் மொபைலைப் பயன்படுத்தி, உங்கள் தனிப்பட்ட தகவலை அணுக முடியாது.

ஃபிஷிங் முயற்சிகளைத் தவிர்க்கவும்

 • சந்தேகத்திற்குரிய URLகள் அல்லது இணைப்புகளை எப்போதும் சரிபார்த்தல்

  ஃபிஷிங் என்பது கடவுச்சொல் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவலைத் தெரிந்து கொள்வதற்காக உங்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். இது பல்வேறு விதங்களில் மேற்கொள்ளப்படுவதால், சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களையும் இணையதளங்களையும் எப்படிக் கண்டறிவது என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியமானதாகும். எடுத்துக்காட்டாக, ஹேக்கர் ஒருவர் நம்பகமானதாகத் தோன்றும் உள்நுழைவுப் பக்கத்தை உருவாக்கலாம். ஆனால் நிஜத்தில் அது போலியானதாக இருக்கும். உங்கள் கடவுச்சொல்லைத் தெரிந்து கொண்டதும், ஹேக்கர் உங்கள் கணக்கை அணுகலாம் அல்லது உங்கள் சாதனத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

  ஃபிஷிங்கைத் தடுக்க, நீங்கள் செய்ய வேண்டியவை:

  • சந்தேகத்திற்குரிய இணைப்புகளைக் கிளிக் செய்யக்கூடாது.
  • நம்பகமான இணையதளம் அல்லது ஆப்ஸில்தான் உங்கள் தரவை உள்ளிடுகிறீர்கள் என்பதை உறுதிசெய்ய, எப்போதும் URLலை நன்கு சரிபார்க்கவும்.
  • எந்தவொரு தகவலையும் சரிபார்ப்பதற்கு முன், தளத்தின் URL “https” எனத் தொடங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
 • ஆள்மாறாட்டம் செய்பவர்களைக் குறித்து கவனமாக இருத்தல்

  உங்களுக்குத் தெரிந்த ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் செய்தி வழக்கத்திற்கு மாறாக இருந்தால், அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம். மின்னஞ்சல் நம்பகமானது என்பதை உறுதிப்படுத்தும் வரை, அதற்குப் பதிலளிக்க வேண்டாம் அல்லது எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம்.

  பின்வருபவற்றைச் சரிபார்க்கவும்:

  • பணத்திற்கான அவசரக் கோரிக்கைகள்
  • வேறு நாட்டில் மாட்டிக்கொண்டதாகத் தெரிவிப்பவர்
  • தனது ஃபோன் தொலைந்ததாகவும், அதை அழைக்க முடியாது என்றும் கூறுபவர்
 • தனிப்பட்ட தகவலுக்கான கோரிக்கைகள் குறித்து கவனமாக இருத்தல்

  கடவுச்சொற்கள், வங்கிக் கணக்கு அல்லது கிரெடிட் கார்டு எண்கள் அல்லது உங்கள் பிறந்தநாள் போன்ற தனிப்பட்ட தகவலைக் கேட்கும் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்கள், மெசேஜ்கள் அல்லது பாப் அப் சாளரங்களுக்குப் பதிலளிக்க வேண்டாம். உங்கள் வங்கி போன்று நீங்கள் நம்பும் தளத்திலிருந்து மெசேஜைப் பெற்றாலும்கூட, ஒருபோதும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் அல்லது பதில் அனுப்ப வேண்டாம். நேரடியாக அவர்களது இணையதளம் அல்லது ஆப்ஸுக்குச் சென்று, உங்கள் கணக்கில் உள்நுழைவதே சிறந்ததாகும்.

  நம்பகமான தளங்களும் சேவைகளும் கடவுச்சொற்கள் அல்லது நிதி சார்ந்த தகவலை மின்னஞ்சலில் அனுப்பும்படி கேட்டு ஒருபோதும் மெசேஜ் அனுப்புவதில்லை.

 • மின்னஞ்சல் ஸ்கேம்கள், போலியான பரிசுகள் மற்றும் கிஃப்ட்கள் குறித்து கவனமாக இருத்தல்

  அந்நியர்களிடமிருந்து பெறும் மெசேஜ்கள் எவ்வளவு சாதகமான செய்தியைக் கூறினாலும் (எதையேனும் வென்றுவிட்டீர்கள் என்பதைத் தெரிவிப்பது, கருத்துக்கணிப்பை முடித்ததற்காகப் பரிசுகளை வழங்குவது அல்லது பணம் ஈட்டுவதற்கான விரைவான வழிகளை விளம்பரப்படுத்துவது போன்றவை) அவை எப்போதுமே சந்தேகத்துக்குரியவை தான். சந்தேகத்திற்குரிய இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். சந்தேகத்திற்குரிய படிவங்கள் அல்லது கருத்துக்கணிப்புகளில் தனிப்பட்ட தகவலை ஒருபோதும் உள்ளிட வேண்டாம்.

 • கோப்புகளைப் பதிவிறக்குவதற்கு முன், நன்றாகச் சரிபார்த்தல்

  பாதிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் PDF இணைப்புகள் மூலம் சில அதிநவீன ஃபிஷிங் தாக்குதல்கள் ஏற்படலாம். சந்தேகத்திற்குரிய இணைப்பைக் கண்டறிந்தால், Chrome அல்லது Google இயக்ககத்தைப் பயன்படுத்தி அதைத் திறக்கவும். இதன் மூலம் உங்கள் சாதனத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். வைரஸ் இருந்தால், உங்களுக்கு எச்சரிக்கை காட்டப்படும்.

பாதுகாப்பான நெட்வொர்க்குகளிலும் இணைப்புகளிலும் உலாவவும்

 • பாதுகாப்பான நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துதல்

  பொது அல்லது இலவச வைஃபையைப் பயன்படுத்தும்போது, கடவுச்சொல் தேவைப்படும் இணைப்புகளாக இருந்தாலும் கவனமாக இருக்கவும். இந்த நெட்வொர்க்குகள் என்க்ரிப்ட் செய்யப்படாமல் இருக்கலாம், எனவே பொதுவான நெட்வொர்க்குடன் இணைக்கும் போது, அருகிலுள்ள எவரும் உங்கள் இணையச் செயல்பாட்டை (நீங்கள் பார்க்கும் இணையதளங்கள் மற்றும் தளங்களில் நீங்கள் உள்ளிடும் தகவல் போன்றவை) கண்காணிக்கக்கூடும். பொது அல்லது இலவச வைஃபையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருந்தால், தளத்துடனான உங்கள் இணைப்பு பாதுகாப்பானதா என்பதை Chrome உலாவியின் முகவரிப் பட்டியில் தெரிந்து கொள்ளலாம். வீட்டிலும் கூட, உங்கள் வைஃபை உலாவல் செயல்பாட்டின் தனியுரிமையையும் பாதுகாப்பையும், உங்கள் வைஃபை நெட்வொர்க்கை என்க்ரிப்ட் செய்வதன் மூலமும் வலிமையான கடவுச்சொல்லை அமைப்பதன் மூலமும் பாதுகாக்கவும்.

 • முக்கியத் தகவலை உள்ளிடும் முன்பு, பாதுகாப்பான இணைப்புகளில் உள்ளீர்களா என்பதைச் சரிபார்த்தல்

  நீங்கள் இணையத்தில் உலாவும் போது, குறிப்பாக கடவுச்சொல் அல்லது கிரெடிட் கார்டு எண் போன்ற முக்கியமான தகவலை உள்ளிட வேண்டுமெனில், நீங்கள் பார்க்கும் தளங்களுடனான இணைப்பு பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். அது பாதுகாப்பான URL ஆக இருந்தால், Chrome உலாவியில் சாம்பல் நிறத்தில், முழுவதும் பூட்டப்பட்ட ஒரு ஐகான் URL புலத்தில் தோன்றும். HTTPS ஆனது உங்கள் உலாவி அல்லது ஆப்ஸை நீங்கள் பார்க்கும் தளங்களுடன் பாதுகாப்பாக இணைத்து, நீங்கள் பாதுகாப்பாக உலாவுவதற்கு உதவும்.

எங்களின் பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி மேலும் அறிக

உங்கள் பாதுகாப்பு

தொழில்துறையின் சிறந்த பாதுகாப்பைப் பயன்படுத்தி, ஆன்லைனில் உங்களைப் பாதுகாக்கிறோம்.

உங்கள் தனியுரிமை

அனைவருக்கும் ஏற்ற தனியுரிமையைக் கட்டமைக்கிறோம்.

குடும்பங்களுக்கானது

ஆன்லைனில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவற்றை நிர்வகிக்க உங்களுக்கு உதவுவோம்.