பொறுப்பான தரவு நடைமுறைகளின்
மூலம் உங்கள் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது.

நீங்கள் தினமும் பயன்படுத்தும் தயாரிப்புகளையும் சேவைகளையும் மேலும் உதவிகரமானதாக ஆக்குவதில் தரவு முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தத் தரவைப் பொறுப்பாகக் கையாளவும் கடுமையான நெறிமுறைகள், புதுமையான தனியுரிமைத் தொழில்நுட்பங்கள் ஆகியவை மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

தரவுச் சேகரிப்பைக் குறைத்தல்

பயன்படுத்தப்படுகின்ற மற்றும் சேமிக்கப்படுகின்ற தனிப்பட்ட தகவல்களைக் கட்டுப்படுத்துதல்

Mapsஸில் உங்களுக்குப் பிடித்த இடங்களைக் கண்டுபிடிப்பது அல்லது YouTubeல் எதைப் பார்ப்பது என்பதற்கான பரிந்துரைகளைப் பெறுவது என எதுவாக இருந்தாலும் உங்களுக்குப் பயனுள்ளதாகவும் உதவியாகவும் இருக்கும் வரை மட்டுமே உங்கள் தகவல்களைத் தயாரிப்புகள் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

இதுவரை சென்ற இடங்கள் அம்சத்தை நீங்கள் முதல் முறையாக இயக்கும்போது (இயல்பாக முடக்கத்தில் இருக்கும்) தானாக நீக்கும் விருப்பம் இயல்பாக 18 மாதங்கள் என அமைக்கப்படும். இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டின் தானாக நீக்கும் விருப்பமும் புதிய கணக்குகளுக்கு இயல்பாக 18 மாதங்கள் என அமைக்கப்பட்டிருக்கும். அதாவது செயல்பாட்டுத் தரவு நீங்கள் நீக்கும் வரை வைக்கப்படாமல், 18 மாதங்களுக்குப் பிறகு தானாகவும் தொடர்ச்சியாகவும் நீக்கப்படும். இந்த அமைப்புகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம், தானாக நீக்குதல் அமைப்பை மாற்றலாம்.

அணுகலைத் தடைசெய்தல்

உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் ஒருபோதும் விற்பதில்லை. யாருக்கு அணுகல் வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உங்களிடமே இருக்கும்

மூன்றாம் தரப்பினரிடமிருந்து உங்கள் தரவைப் பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எனவேதான் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் யாருக்கும் விற்கக்கூடாது என்ற கடுமையான கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம். உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளங்காணும் தகவல்களை (நீங்கள் எங்களைக் கேட்டுக்கொண்டால் தவிர) விளம்பரதாரர்களிடம் பகிர மாட்டோம். எடுத்துக்காட்டாக, அருகிலுள்ள அழகு நிலைய விளம்பரத்தைப் பார்த்து "அழைப்பதற்குத் தட்டுக" எனும் பட்டனை நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்கள் அழைப்பை இணைத்து உங்கள் மொபைல் எண்ணை அழகு நிலையத்துடன் நாங்கள் பகிரக்கூடும். நீங்கள் Android சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் சில வகையான தரவை அணுக மூன்றாம் தரப்பு ஆப்ஸுக்கு உங்கள் அனுமதியைக் கேட்க வேண்டியிருக்கும். உதாரணமாக, உங்கள் படங்கள், தொடர்புகள், இருப்பிடம்.

தனியுரிமை தொடர்பான புதுமை

மேம்பட்ட தனியுரிமைத் தொழில்நுட்பங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்க உதவுகின்றன

எங்கள் தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்துவதைப் பாதிக்காமல் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறோம்.

ஃபெடரேட்டட் லேர்னிங் என்பது தரவுச் சேகரிப்பைக் குறைக்கும் Googleளின் முன்னோடித் தொழில்நுட்பமாகும். இது எங்களின் உதவிகரமான அம்சங்கள் பலவற்றை (எ.கா. சொல்லைக் கணித்தல்) உங்கள் சாதனத்திற்கே கொண்டு சேர்க்கும் வகையில் மெஷின் லேர்னிங் மாடல்களுக்குப் பயிற்சியளிக்கிறது. இந்தப் புதிய அணுகுமுறை எங்கள் தயாரிப்புகள் அனைத்திலும் உங்களுக்கு உதவிகரமான அனுபவத்தை வழங்குவதன் மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க உதவுகிறது. அதேசமயம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் உங்கள் சாதனங்களிலேயே இருக்கும்.

அடையாளம் நீக்கிச் செயலாக்கும் முன்னணித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் தரவைப் பாதுகாக்கிறோம். அதேசமயம் உங்களுக்குப் பயன்படும் வகையில் சிறப்பான சேவைகளை வழங்குகிறோம். உதாரணமாக, உங்கள் வீட்டிற்கு விரைவாகச் செல்வதற்கான மாற்று வழிகளைப் பரிந்துரைக்க, லட்சக்கணக்கான பயனர்களிடமிருந்து தரவை ஒருங்கிணைத்து அடையாளம் நீக்கிச் செயலாக்குகிறோம்.

Mapsஸில் பிஸியாக இருக்கும் இடங்களைக் காட்டுதல் போன்ற அம்சங்களை வழங்க, 'நுண் பாதுகாப்பு' எனப்படும் அடையாளம் நீக்கிச் செயலாக்கும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். இந்தத் தொழில்நுட்பத்தில் தொடர்பற்ற தகவல்கள் உங்கள் தகவல்களுடன் சேர்க்கப்படும் என்பதால் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காண அவற்றைப் பயன்படுத்த முடியாது.

தனியுரிமை மதிப்பாய்வுகள்

தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும்
கடுமையான தனியுரிமை நெறிமுறைகளைப் பின்பற்றுகிறோம்

எங்களின் தயாரிப்புகளை உருவாக்குவதில் தனியுரிமை முக்கியப் பங்கு வகிக்கிறது. தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் கடுமையான தனியுரிமைத் தரநிலைகளைப் பராமரிக்கிறோம். இந்தத் தனியுரிமைத் தரநிலைகளை ஒவ்வொரு தயாரிப்பிலும் அம்சத்திலும் பின்பற்றுகிறோம். மேலும் விரிவான தனியுரிமை மதிப்பாய்வுகள் மூலம் அவற்றைச் செயல்படுத்துகிறோம். எங்களின் தனியுரிமைக் கொள்கை பக்கத்தில் மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

தரவு வெளிப்படைத்தன்மை

உங்கள் தரவைப் பார்ப்பதையும் நீக்குவதையும் எளிதாக்குகிறோம்

எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்பது உங்கள் விருப்பமாகும். எந்தத் தரவைச் சேமிக்க வேண்டும், பகிர வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்ற தெளிவான முடிவுகளை நீங்கள் எடுப்பதற்கு உதவ, என்னென்ன தரவு சேமிக்கப்படுகிறது, எதற்காகச் சேமிக்கப்படுகிறது போன்ற தகவல்களை எளிதில் புரிந்துகொள்ளும்படி வழங்குகிறோம்.

எடுத்துக்காட்டாக, Google Dashboardக்குச் சென்றால் நீங்கள் பயன்படுத்தும் Google தயாரிப்புகளையும் மின்னஞ்சல்கள், படங்கள் போன்ற நீங்கள் சேமித்துள்ள விஷயங்களையும் பார்க்கலாம். மேலும் 'எனது செயல்பாடுகள்' என்ற பக்கத்திற்குச் சென்றால் Google சேவைகளில் உங்கள் செயல்பாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவை (நீங்கள் தேடியவை, பார்த்தவை, கண்டுகளித்தவை உட்பட) எளிதாகப் பார்க்கலாம் நீக்கலாம்.

தரவின் பெயர்வுத்திறன்

உங்கள் தரவைப் பெற உங்களுக்கு அதிகாரம் அளித்தல்

எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள உள்ளடக்கத்தை ஒவ்வொரு பயனரும் எந்த நேரத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் அணுகலாம். எனவேதான் 'எனது தரவைப் பதிவிறக்குதல்' பக்கத்தை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் உங்கள் படங்கள், மின்னஞ்சல்கள், தொடர்புகள், புக்மார்க்குகள் ஆகியவற்றைப் பதிவிறக்கலாம். உங்கள் விருப்பப்படி தரவை நகலெடுக்கலாம், காப்புப் பிரதி எடுக்கலாம், மற்றொரு சேவைக்கு நகர்த்தவும் செய்யலாம்.

உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படும் தரவின் கட்டுப்பாடு எப்போதும் உங்களிடமே இருக்கும். இங்கு மேலும் அறிக.

பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு
இணங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்

பொருந்தக்கூடிய தனியுரிமை விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலேயே நாங்கள் எப்போதும் செயல்படுகிறோம். உலகெங்கிலும் உள்ள தரவுப் பாதுகாப்பு ஆணையங்களுடன் பல ஆண்டுகளாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர்களின் வழிகாட்டுதல்களைப் பிரதிபலிக்கும் வலுவான தனியுரிமைப் பாதுகாப்புகளைச் செயல்படுத்தியுள்ளோம். மேலும் உலகம் முழுவதும் தனியுரிமைக்கான சட்டங்கள் இயற்றப்பட்டு வருவதால் எங்களின் சிஸ்டங்களையும் கொள்கைகளையும் மேம்படுத்த, தொடர்ந்து கணிசமாக முதலீடு செய்து வருகிறோம்.

மேலும் அறிக
நாங்கள் உங்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்கும்
கூடுதல் வழிகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.