உங்கள் டிஜிட்டல் வாழ்க்கை
Pixel மூலம் பாதுகாக்கப்படுகிறது.

உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மொபைல் உள்ளது. உங்களின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்கமான தகவல்களில் சிலவற்றை உங்கள் மொபைலில்தான் வைத்திருப்பீர்கள். எனவேதான் பாதுகாப்பையும் தனியுரிமையையும் மையமாகக் கொண்டு Pixel மொபைலை உருவாக்கியுள்ளோம்.

Pixel எல்லா வழிகளிலும்
உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைக்கிறது.

பாதுகாப்புக்கென்று வடிவமைக்கப்பட்டது

தொடக்கம் முதல் இறுதி வரை உங்கள் தரவு பல அடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்படுகிறது.

அங்கீகரிப்புச் செயல்முறை

உங்கள் மொபைலுக்கான அணுகல் உங்களுக்கு மட்டுமே உள்ளதை உறுதிப்படுத்த அங்கீகரிப்புச் செயல்முறை உதவுகிறது.

Pixel நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

சாதனத்தின் நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உங்கள் தரவைத் தனிப்பட்டதாக வைத்திருக்க உதவுகிறது.

பாதுகாப்பு & கட்டுப்பாடுகள்

நீங்கள் பதிவிறக்குபவை, இணையத்தில் பார்ப்பவை மற்றும் பகிர்பவற்றுக்கான எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தனியுரிமைக் கட்டுப்பாடுகள் மற்றும் செயல்திறன்மிக்க பாதுகாப்பு.

பாதுகாப்புக்கென்று வடிவமைக்கப்பட்டது

உங்கள் மொபைலையும் தரவையும் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்படும்படி Pixelலின் வன்பொருளும் மென்பொருளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Titan™ M சிப்

Titan™ M சிப்

உங்களின் அதிமுக்கியத் தகவல்களைப் பாதுகாப்பதற்கு உதவ, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட எண்டர்பிரைஸ் கிரேடு Titan M பாதுகாப்புச் சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற சிப்பைப் பயன்படுத்திதான் நாங்கள் Google Cloud தரவு மையங்களைப் பாதுகாக்கிறோம். இந்தச் சிப் உங்களின் அதிமுக்கியச் செயல்முறைகளையும் தகவல்களையும் கையாளுகிறது. இவற்றில் கடவுக்குறியீட்டைப் பாதுகாத்தல், என்க்ரிப்ட் செய்தல், ஆப்ஸில் பணப் பரிமாற்றங்களைப் பாதுகாத்தல் போன்றவை அடங்கும்.

சாதனத்திலுள்ள நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள்

Google தனது தயாரிப்புகளைப் பல ஆண்டுகளுக்கு இன்னும் உதவிகரமாக ஆக்குவதற்கு மெஷின் லேர்னிங் (ML) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. இந்தத் தயாரிப்புகளில் Pixel மொபைல்களும் அடங்கும். பாடல் விவரம் போன்ற அம்சங்களையும் ரெக்கார்டர் ஆப்ஸையும் செயல்படுத்த, சாதனத்திலுள்ள நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ML மாடல்களைப் பயன்படுத்துகிறது. இது உங்கள் தரவின் பெரும்பகுதியை உங்கள் மொபைலிலேயே வைத்திருக்கும், மேலும் இவற்றை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.

அதிகமான தரவை உங்கள் சாதனத்தில் வைத்திருக்க உதவும் ML தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதில் நாங்கள் முன்னோடியாக இருந்து வருகிறோம். இந்த வழிகளுள் ஒன்று ஃபெடரேட்டட் லேர்னிங் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் புதிய அணுகுமுறை ML மாடல்களுக்குப் பயிற்சியளிக்க வெவ்வேறு சாதனங்களிலிருந்து அடையாளம் நீக்கிய தகவல்களை ஒருங்கிணைக்கிறது. மேலும் எவரையும் குறித்து தனிப்பட்ட விதத்தில் அறிந்துகொள்ளாமல் அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள எங்களுக்கு இது உதவுகிறது. உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கவும் இன்னும் பல பயனுள்ள தயாரிப்புகளையும் சேவைகளையும் உருவாக்கவும் (எ.கா. பாடல் விவரம் அம்சம்) ஃபெடரேட்டட் லேர்னிங் உதவுகிறது. மேலும் அறிக

உத்திரவாதமான தானியங்குப் புதுப்பிப்புகள்

உங்கள் Pixel மொபைலில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்காவது சமீபத்திய OS மற்றும் பாதுகாப்புப் புதுப்பிப்புகளைத் தானாகவே பெறுவீர்கள்.1 மேலும் Google ஆப்ஸை Google Play மூலம் மட்டுமே புதுப்பிக்க முடியும் என்பதால் உங்களுக்குப் பிடித்தமான ஆப்ஸில் புதிய அம்சங்களையும் பாதுகாப்பு மேம்பாடுகளையும் உடனுக்குடன் பெறுவீர்கள்.

தடையற்ற புதுப்பிப்புகளைப் பெறுங்கள்

புதுப்பிப்பு பெறப்படும்போது Pixel அதைத் தானாகவே உங்கள் மொபைலில் பதிவிறக்கி, சேமிப்பகத்தில் உள்ள பார்டிஷன் எனும் பிரத்தியேகப் பகுதியில் அதை நிறுவிடும். OS புதுப்பிப்பை நிறுவும்படி உங்களிடம் கேட்கப்படாது. இது முற்றிலும் பின்னணியில் நிகழும் என்பதால் எந்தக் குறுக்கீடுமின்றி உங்கள் மொபைலை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். புதுப்பிப்பு நிறுவப்பட்டு நீங்கள் பயன்படுத்தத் தயாராக இருக்கும்போது உங்கள் மொபைலை மீண்டும் தொடங்கினால் போதும், உங்கள் மொபைலில் OSஸின் சமீபத்திய பதிப்பு கிடைக்கும்.

சரிபார்க்கப்பட்ட தொடக்கம்

Pixel மொபைலை நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு முறையும், நீங்கள் பயன்படுத்தும் OS Googleளில் இருந்து பெறப்பட்டது என்பதையும் அது மாற்றப்படவில்லை என்பதையும் உறுதிசெய்ய Titan M சிப்பும் சரிபார்க்கப்பட்ட தொடக்கச் செயல்முறையும் உதவுகின்றன. Titan M சிப்பில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களைச் சரிபார்த்து உங்களிடம் OSஸின் சமீபத்திய பதிப்பு உள்ளதையும் 'சரிபார்க்கப்பட்ட தொடக்கம்' அம்சம் உறுதிசெய்திடும். ஒருவேளை முந்தைய பதிப்பை உங்கள் Pixel மொபைல் பயன்படுத்தினால் அதைத் தடுத்திடும். இது பாதுகாப்பு தொடர்பான பாதிப்புகள் இருப்பதாக அறியப்பட்ட முந்தைய OS பதிப்புகளைத் தீங்கிழைப்பவர்கள் உங்கள் மொபைலில் ஏற்றுவதிலிருந்து தடுக்க உதவிடும், இதனால் உங்கள் மொபைல் பாதுகாப்பாக இருக்கும்.

அங்கீகாரம்

Pixelலில் உள்ள அங்கீகரிப்புச் செயல்முறை மற்றவர்கள் உங்கள் மொபைலை அணுகாதபடி தடுக்க உதவுகிறது.

Pixel மொபைலை அன்லாக் செய்தல்

Pixel மொபைலை அன்லாக் செய்தல்

உங்கள் மொபைலை அன்லாக் செய்வது எளிதானது, விரைவானது மற்றும் பாதுகாப்பானது. Pixel 4a மொபைலில் உள்ள Pixel Imprint போன்ற அம்சங்கள் உங்கள் மொபைலுக்கான அணுகல் உங்களுக்கு மட்டுமே இருப்பதை உறுதிப்படுத்த உதவுகின்றன. உங்களுக்கு விருப்பமான ஆப்ஸில் பாதுகாப்பாகப் பேமெண்ட் செய்யவும் அவை உதவுகின்றன. உங்கள் கைரேகைத் தரவு பாதுகாப்பாகச் சேமிக்கப்படுவதுடன் உங்கள் மொபைலிலேயே இருக்கும்.

Pixel 4 மொபைலில் உள்ள முகம் காட்டித் திறத்தல் அம்சம் பயன்படுத்தும் முகமறிதல் தொழில்நுட்பம் உங்கள் மொபைலிலேயே செயலாக்கப்படும். இதனால் உங்கள் முகத் தரவு ஒருபோதும் கிளவுடில் சேமிக்கப்படாது அல்லது பிற சேவைகளுடன் பகிரப்படாது. முகத்தின் படங்கள் ஒருபோதும் சேமிக்கப்படுவதில்லை அல்லது தக்கவைக்கப்படுவதில்லை. உங்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்காக, அன்லாக் செய்யப் பயன்படுத்தப்படும் உங்கள் முகத் தரவானது Pixelலின் Titan M பாதுகாப்புச் சிப்பில் பத்திரமாகச் சேமிக்கப்படும். மேலும் உங்களின் மொபைலிலோ ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலோ சேமிக்கப்படாது.

Find My Device

உங்கள் Pixel மொபைலை எங்கே வைத்தீர்கள் என்று தெரியாவிட்டால், Find My Device அதைக் கண்டறிய உதவிடும்.2 உலாவியில் உங்கள் Google கணக்கில் உள்நுழைவதன் மூலமோ Android சாதனத்தில் Find My Device ஆப்ஸைப் பயன்படுத்தியோ உங்கள் மொபைல் இருக்குமிடத்தைக் கண்டறியலாம், ஒலி எழுப்பவும் செய்யலாம்.

Find My Device அம்சம் மூலம் உங்கள் மொபைலைத் தொலைநிலையிலிருந்தே பூட்டலாம் அல்லது பூட்டுத் திரையில் மெசேஜைத் தோன்றச் செய்யலாம், இதனால் யாராவது உங்கள் மொபைலைக் கண்டறிந்தால் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். உங்கள் மொபைலை இனி கண்டறிய முடியாது என்று கருதினால் தொலைநிலையிலிருந்தே தரவு அனைத்தையும் அழித்துவிடலாம். மேலும் அறிக

ஆரம்பநிலை மீட்டமைவுப் பாதுகாப்பு

திருட்டுக்கு எதிரான மேம்பட்ட பாதுகாப்பை வழங்க, எல்லா Pixel மொபைல்களுமே ஆரம்பநிலை மீட்டமைவுப் பாதுகாப்புடன் வருகின்றன. உங்களின் கடவுக்குறியீடு அல்லது Google கணக்கின் கடவுச்சொல் இல்லாமல் எவரும் உங்கள் மொபைலை மீண்டும் செயல்படுத்த முடியாது என்பதை உறுதிசெய்ய இது உதவுகிறது. உங்கள் மொபைலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான பல வழிகளில் இதுவும் ஒன்று. மேலும் அறிக

Pixel நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

சாதனத்தில் மெஷின் லேர்னிங் மற்றும் AI தொழில்நுட்பங்களில் நாங்கள் செய்துள்ள மேம்பாடுகள் Pixelலை இன்னும் உதவிகரமாக ஆக்குகின்றன. அதேசமயம் தரவும் உங்களிடமே இருக்கும்.

பாடல் விவரம்

பாடல் விவரம்

பாடல் விவரம் அம்சத்தின் மூலம் உங்களைச் சுற்றி ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலின் விவரத்தை உங்கள் Pixel மொபைலில் அறிந்துகொள்ள முடியும். பாடல் விவரத்தைக் கண்டறியும் பிற சேவைகளைப் போன்று அல்லாமல் எல்லாச் செயலாக்கமும் Pixel சாதனத்திலேயே நடைபெறும். ஒரு பாடல் ஒலிக்கும்போது டிராக்கின் ஒரு சில வினாடிகளைச் சாதனத்தில் உள்ள இசைத் தரவுத்தளத்துடன் ஒப்பிட்டு பாடல் விவரத்தை மொபைல் விரைவாகக் கண்டறிந்திடும். இந்தச் செயல்முறையின்போது உங்கள் ஆடியோ மொபைலிலேயே இருக்கும். பாடல் விவரம் அம்சம் விரைவாகச் செயல்படும், நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.

பாடல் விவரம் அம்சம் ஃபெடரேட்டட் அனாலிடிக்ஸ் எனப்படும் தனியுரிமையைப் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை Pixel 4 மொபைலில் பயன்படுத்துகிறது. இது Pixel மொபைல்கள் அனைத்திலும் மிகவும் அடிக்கடி தேடப்பட்ட பாடல்களைப் பிராந்தியத்தின்படி கண்டறியும். இதில் தனிப்பட்ட மொபைலில் என்னென்ன பாடல்கள் கேட்கப்பட்டன என்பது காட்டப்படாது. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தரவைப் பயன்படுத்தி, மற்றவர்கள் அதிகம் கேட்கும் சாத்தியமுள்ள பாடல்களைக் கொண்டு சாதனத்திலுள்ள பாடல் தரவுத்தளத்தைப் புதுப்பிக்கும். நீங்கள் என்னென்ன பாடல்களைக் கேட்கிறீர்கள் என்பதை Google பார்க்காது. மேலும் அறிக

பழகிய முகங்கள்

நீங்கள் அடிக்கடி படமெடுக்கும் நபர்களை Pixel அம்சம் அறிந்து, அவர்கள் புன்னகைக்கும்போதும் கண்களை இமைக்காதபோதும் சூப்பர் ஷாட் படங்களை எடுக்கும். இதைச் செய்ய, உங்கள் படங்களில் அதிகம் தோன்றும் முகங்களின் தகவல்களை Pixel செயலாக்கிச் சேமிக்கும். இந்தத் தகவல்கள் நிஜ உலக அடையாளத்தை எந்தவிதத்திலும் தொடர்புபடுத்தாது. இது முற்றிலும் உங்கள் சாதனத்திலேயே நடக்கும். ஒருபோதும் Googleளில் பதிவேற்றப்படாது, உங்கள் Google கணக்குடன் தொடர்புபடுத்தப்படாது அல்லது பிற ஆப்ஸுடன் பகிரப்படாது. பழகிய முகங்கள் அம்சம் இயல்பாக முடக்கப்பட்டிருக்கும். மேலும் அதை இயக்கிவிட்டு முடக்கினால் பழகிய முகங்கள் தரவு அனைத்தும் நீக்கப்படும்.

திரை மீது கவனம்

'திரை மீது கவனம்' அம்சத்தின் மூலம் நீங்கள் மொபைல் திரையைப் பார்க்கும்போது அதை ஆஃப் ஆகாமல் வைத்திருக்கலாம். 'திரை மீது கவனம்' அம்சமானது மெஷின் லேர்னிங் மாடல்கள், முன்பக்கக் கேமரா ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. யாராவது உங்கள் மொபைல் திரையைப் பார்ப்பதாகக் கண்டறிந்தால் திரை உறக்க நிலைக்குச் செல்லாமல் இது தடுத்திடும். இந்தப் பகுப்பாய்வு உங்கள் சாதனத்திலேயே செய்யப்படும். தரவு எதுவும் சேமிக்கப்படாது, பகிரப்படாது அல்லது Googleளுக்கு அனுப்பப்படாது. காட்சி அமைப்புகளுக்குச் சென்று நீங்கள் 'திரை மீது கவனம்' அம்சத்தை எப்போது வேண்டுமானாலும் இயக்கலாம் முடக்கலாம்.

Motion Sense

Motion Sense

சைகைகளையும் யாராவது அருகில் உள்ளார்களா என்பதையும் அறிந்துகொள்வதற்காக சோலி (Soli) எனப்படும் அசைவைக் கண்டறிவதற்கான ரேடார் சிப்பையும் தனித்துவமான மென்பொருள் அல்காரிதங்களையும் Pixel 4 மொபைல் பயன்படுத்துகிறது. Motion Sense3 அம்சத்தை எப்போது வேண்டுமானாலும் இயக்கலாம் முடக்கலாம். சென்சார் தரவு அனைத்துமே உங்கள் Pixel மொபைலிலேயே செயலாக்கப்படும். அவை ஒருபோதும் Google சேவைகளிலோ பிற ஆப்ஸிலோ சேமிக்கப்படாது அல்லது பகிரப்படாது.

அழைப்பாளர் ஐடி & ஸ்பேம் பாதுகாப்பு

தெரியாத எண்களிலிருந்து பெறப்படும் சில அழைப்புகள் மோசடியாக இருக்கலாம். எனவேதான் அழைப்பாளர் ஐடி & ஸ்பேம் பாதுகாப்பு அம்சங்களுடன் Pixel மொபைல் வருகிறது. இதன் மூலம் உங்கள் தொடர்புகளில் இல்லாத அழைப்பாளர்கள் அல்லது பிசினஸ்கள் குறித்த தகவல்களைப் பார்க்கலாம், ஸ்பேம் அழைப்பாளர்கள் குறித்த எச்சரிக்கைகளைப் பெறலாம். மேலும் அறிக

Messages ஆப்ஸுக்கான மெசேஜ் சரிபார்ப்பு & ஸ்பேம் பாதுகாப்பு

Messages ஆப்ஸுக்கான மெசேஜ் சரிபார்ப்பு அம்சம் உங்களுக்கு மெசேஜ் அனுப்புகின்ற பிசினஸின் உண்மையான அடையாளத்தை உறுதிசெய்ய உங்களுக்கு உதவிடும். இந்த அம்சத்தில் ஒவ்வொரு மெசேஜும் ஒரு குறிப்பிட்ட பிசினஸிடமிருந்து பெறப்பட்டதுதானா என்று தனித்தனியாகச் சரிபார்க்கப்படும். மெசேஜ் சரிபார்க்கப்படும்போது உங்கள் மெசேஜ் Googleளுக்கு அனுப்பப்படாது. மெசேஜ் தொடரில் பிசினஸ் பெயர், லோகோவுடன் சேர்த்து ஒரு சரிபார்ப்பு முத்திரையையும் நீங்கள் காண்பீர்கள்.

உங்களுக்கு மெசேஜ் அனுப்பக்கூடிய பிசினஸ்களைச் சரிபார்ப்பதுடன் கூடுதலாக, Messages ஆப்ஸில் ஸ்பேமில் இருந்து உங்களைப் பாதுகாக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். Messages ஆப்ஸுக்கான ஸ்பேம் பாதுகாப்பு அம்சத்தில் சந்தேகத்திற்கிடமான ஸ்பேம் அல்லது பாதுகாப்பற்ற இணையதளங்களை நாங்கள் கண்டறிந்தால் உங்களுக்கு எச்சரிப்போம். Messages ஆப்ஸில் சந்தேகத்திற்கிடமான ஸ்பேம் எச்சரிக்கையை நீங்கள் பார்த்தால் அது ஸ்பேமா இல்லையா என எங்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் எங்களின் ஸ்பேம் மாடல்களை மேம்படுத்த உதவலாம். Messages ஆப்ஸில் ஸ்பேம் மெசேஜ்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் புகாரளித்து, உரையாடலைத் தடுக்கவும் செய்யலாம். இதனால் இனி அந்த மெசேஜ்களைப் பெறமாட்டீர்கள்.

அழைப்பு வடிப்பான்

Pixel மொபைலில் அழைப்பு வடிப்பான்4 அம்சமும் உள்ளது. யார் உங்களை அழைக்கிறார், எதற்காக அழைக்கிறார் போன்ற விவரங்களை அழைப்பை ஏற்பதற்கு முன்பே நீங்கள் கண்டறிவதற்கு உதவ Google Assistantடை இந்த அம்சம் பயன்படுத்துகிறது. இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு தேவையற்ற அழைப்புகளையும் தவிர்க்க உதவிடும். உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க, உங்கள் அழைப்பின் டிரான்ஸ்கிரிப்ஷன் முழுவதும் உங்கள் சாதனத்திலேயே நடக்கும். மேலும் அறிக

Gboard

Pixel மொபைலின் இயல்புநிலைக் கீபோர்டு உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நீங்கள் பல வழிகளில் தொடர்பு கொள்ள உதவுகிறது. இதில் விரலால் நகர்த்தி உள்ளிடுதல், குரல் மூலம் உள்ளிடுதல், சைகை போன்றவை அடங்கும். 900+ மொழிகளுக்கிடையே மாற்றிக் கொள்ளலாம் மற்றும் ஆப்ஸை மாற்றாமலேயே GIF, ஈமோஜி, ஸ்டிக்கர் மற்றும் பலவற்றைப் பகிரலாம். நீங்கள் உள்ளிடுபவற்றைத் தனிப்பட்டதாக வைத்திருக்க, ஃபெடரேட்டட் லேர்னிங் எனப்படும் மெஷின் லேர்னிங் அணுகுமுறையை Gboard பயன்படுத்துகிறது. மெசேஜ்கள் உங்கள் சாதனத்திலேயே இருப்பதை இது உறுதிசெய்கிறது. அத்துடன் தானாகத் திருத்துதல், வார்த்தைப் பரிந்துரைகள், ஈமோஜி பரிந்துரைகள் போன்றவை Gboardல் செயல்படும் விதத்தை மேம்படுத்தவும் Googleளுக்கு உதவுகிறது. மேலும் அறிக

உடனடி வசனம்

ஒரு முறை தட்டினால் போதும், உடனடி வசனம்5 அம்சம் உங்கள் மொபைல் அழைப்புகளையும் மீடியாவையும் தானாகவே எழுத்தாக்கம் செய்யும். மொபைல் அழைப்புகளைச் செய்வதற்கும், வீடியோ, பாட்காஸ்ட், ஆடியோ மெசேஜ் போன்றவற்றுக்கும், நீங்கள் ரெக்கார்டு செய்பவற்றுக்கும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். உடனடி வசனம் அம்சம் இயக்கப்பட்டிருந்தால் பேச்சு கேட்கப்பட்ட உடனேயே உங்கள் திரையில் வசனங்கள் தோன்றும். எல்லாத் தரவும் உங்கள் மொபைலிலேயே இருக்கும்.

சூப்பர் ஷாட்

சூப்பர் ஷாட் அம்சம் இயக்கப்பட்டிருந்தால் உங்கள் படங்களின் ஒளியமைப்பு, முக பாவனைகள், காட்சி ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த ஃபிரேம்களைச் சாதனத்திலுள்ள கம்ப்யூட்டர் விஷன் மாடல் அடையாளம் காணும். அதன் பின்பு சூப்பர் ஷாட் அம்சம் உங்களுக்குச் சிறந்த படங்களைப் பரிந்துரைக்கும். இவை அனைத்தும் உங்கள் சாதனத்திலேயே நடைபெறும். பிற ஷாட்களை நீங்கள் சேமிக்கத் தேர்வுசெய்யாத வரை அவை Googleளில் சேமிக்கப்படாது.

Google Assistant6

உங்கள் குரலைப் பயன்படுத்தி நீங்கள் பலவற்றைச் செய்ய Google Assistant உங்களுக்கு உதவிடும். நீங்கள் இயக்கும் வரை (எ.கா. “Ok Google” என்று கூறுதல்) காத்திருப்புப் பயன்முறையில் இருக்குமாறு Pixelலின் Google Assistant வடிவமைக்கப்பட்டுள்ளது. காத்திருப்புப் பயன்முறையில் இருக்கும்போது உங்கள் உரையாடல்களை Googleளுக்கோ வேறு எவருக்கோ Google Assistant அனுப்பாது.

பாதுகாப்பு & கட்டுப்பாடுகள்

உங்கள் தரவைப் பாதுகாப்பதற்கு Pixel முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறது. மேலும் நீங்கள் என்ன பகிர்கிறீர்கள் என்பது தொடர்பாக உங்களுக்கு முழுமையான கட்டுப்பாடுகளை வழங்குகிறது.

Google Play Protect

Google Play Protect

Google Play ஸ்டோரில் உள்ள அனைத்து ஆப்ஸும் கடுமையான பாதுகாப்புப் பரிசோதனைக்குப் பிறகே அங்கீகரிக்கப்படுகின்றன. உங்கள் சாதனத்தையும் தரவையும் ஆப்ஸையும் மால்வேரில் இருந்து பாதுகாக்க, எங்களின் மெஷின் லேர்னிங் சிஸ்டம் தினமும் 10,000 கோடி ஆப்ஸை ஸ்கேன் செய்கிறது. இது தொடர்ந்து பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். உங்கள் ஆப்ஸை எங்கிருந்து பதிவிறக்கினாலும் அவற்றை நீங்கள் பதிவிறக்குவதற்கு முன்பும் பின்பும் பதிவிறக்கும்போதும் அது ஸ்கேன் செய்திடும். மேலும் அறிக

பாதுகாப்பு உலாவல்

நீங்கள் ஆபத்தான தளங்களுக்குச் சென்றாலோ ஆபத்தான ஃபைல்களைப் பதிவிறக்கினாலோ Googleளின் பாதுகாப்பு உலாவல் தொழில்நுட்பம் எச்சரிக்கைகளைக் காட்டி உங்கள் Pixel மொபைலை ஃபிஷிங் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும். தீங்கு விளைவிப்பவர்களால் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டால் பாதுகாப்பு உலாவல் அம்சம் அவற்றின் வலைநிர்வாகிகளுக்குத் தகவலளிக்கும். அத்துடன் சிக்கலைப் பிழையறிந்து தீர்ப்பதற்கும் அவர்களுக்கு உதவிடும்.

பாதுகாப்பு உலாவல் அம்சம் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் உங்கள் தனியுரிமையையும் பாதுகாக்கிறது. கொடியிடப்பட்ட தளங்களின் பட்டியலை இது உங்கள் சாதனத்தில் சேமித்திடும். அந்தப் பட்டியலில் உள்ள தளத்திற்கு நீங்கள் சென்றால் அந்தத் தளத்தின் URLலின் ஒரு பகுதியின் நகலை உங்கள் உலாவி Googleளுக்கு அனுப்பும். இதை வைத்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் பகிரும் தகவல்களில் இருந்து உண்மையில் எந்தத் தளத்திற்குச் சென்றீர்கள் என்பதை Google அறிந்துகொள்ள முடியாது. மேலும் அறிக

அனுமதிகள்

நீங்கள் பதிவிற்கும் ஆப்ஸ் உங்களின் அதிமுக்கியத் தகவல்களை (எ.கா. படங்கள், இருப்பிடம்) அணுகுவதற்கு முன்பு அவற்றுக்கு உங்கள் அனுமதி தேவை. அனுமதிக் கோரிக்கைகள் சூழலுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன, இதனால் உங்களுக்குத் தேவைப்படாத தருணங்களில் உங்களிடம் கோரப்படாது. விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் அமைப்புகளுக்குச் சென்று அனுமதிகளை முடக்கிக் கொள்ளலாம். உங்களின் இருப்பிடத் தரவைப் பொறுத்த வரை, குறிப்பிட்ட ஆப்ஸுக்கு மட்டும் பின்னணியில் உங்கள் இருப்பிடத்தை அணுகுவதற்கான அனுமதியை வழங்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் உங்களுக்கு உள்ளன. ஆப்ஸைப் பயன்படுத்தும்போது மட்டும் அனுமதித்துக் கொள்ளலாம் அல்லது அணுகலை முற்றிலும் மறுக்கலாம்.

Google கணக்கு அமைப்புகள்

உங்களுக்கு இன்னும் உதவிகரமான மற்றும் தொடர்புடைய அனுபவத்தை வழங்க, Google தயாரிப்புகளும் சேவைகளும் (YouTube, Search, Google Maps போன்றவை) உங்கள் செயல்பாட்டுத் தரவைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தத் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது உங்களுடைய தனிப்பட்ட விருப்பமாகும், அதன் கட்டுப்பாடு உங்களிடமே உள்ளது. எந்த வகையான தரவைச் சேகரிக்கிறோம், அதை எப்படிப் பயன்படுத்துகிறோம், அதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றிய தகவலைத் தொடர்ந்து உங்களுக்குத் தெரிவிப்போம். மேலும் உங்களுக்கேற்ற தனியுரிமை அமைப்புகளை நீங்களே தேர்வுசெய்யும் வகையில், எளிதாகப் பயன்படுத்தக்கூடிய தரவுக் கட்டுப்பாடுகளை உங்கள் Google கணக்கில் உருவாக்கியுள்ளோம். மேலும் அறிக

Pixel மொபைல்
Google Storeரில்
Pixel மொபைல்களை வாங்குங்கள்.
எங்களின் தயாரிப்புகள் அனைத்தும்
எவ்வாறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.