அனைவருக்கும் ஏற்ற தனியுரிமையையும் பாதுகாப்பையும் உருவாக்குதல்
மியூனிக்கில் உள்ள Google பாதுகாப்புப் பொறியியல் மையம் தனியுரிமை மற்றும் பாதுகாப்புப் பொறியியலின் உலகளாவிய மையமாக உள்ளது. Google தனது தயாரிப்புகளின் வெளிப்படைத்தன்மையையும் கட்டுப்பாட்டையும் எவ்வாறு கட்டமைக்கிறது என்பதைப் பொறியாளர் வீலாண்ட் ஹோல்ஃபெல்டரும் ஸ்டீபன் மிக்லிட்ஸும் விவரிக்கின்றனர்.
Googleளில் புதிய வேலைக்கான ஒப்புதல் கடிதத்தைப் பெற்றபோது வீலாண்ட் ஹோல்ஃபெல்டர் அமெரிக்காவில் வசித்து வந்தார். ஜெர்மனியிலிருந்து சிலிகான் பள்ளத்தாக்குக்குக் குடிபெயர்ந்த 12 ஆண்டுகளில் Mercedes-Benz உட்பட பல நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். 2008ல் அனைத்தும் மாறியது. ஹோல்ஃபெல்டரின் அமெரிக்க நண்பர்களும் சக பணியாளர்களும் அவரின் புதிய பதவி மற்றும் நிறுவனம் குறித்து வியந்தனர். ஆனால் அவரின் எதிர்காலப் பணியிடம் கலிஃபோர்னியாவின் மவுண்டைன் வியூவில் இல்லை – ஜெர்மனியில் உள்ள மியூனிக்கில் இருந்தது. இந்தச் செய்தியை அறிந்த அவரின் நண்பர்கள் பெரிதும் உற்சாகமடையவில்லை. மேலும் வழக்கமான வாழ்த்துச் செய்திகளுடன், “Google” என்ற பெயரைக் கூறியதும் சிலரிடமிருந்து முகச்சுளிப்பையும் சந்தேகப் பார்வைகளையும் பெற்றார். ஆனால் பயனர்களின் தரவை ஐரோப்பியர்கள் (குறிப்பாக ஜெர்மானியர்கள்) எவ்வளவு முக்கியமாகக் கருதுவார்கள் என்பதை ஹோல்ஃபெல்டர் அறிந்திருந்தார்.
Google பொறியியல் மையத் தளத்தை வழிநடத்தும் ஹோல்ஃபெல்டர், மியூனிக் அலுவலகத்தின் கேண்டீனில் அமர்ந்திருக்கிறார். அதன் அழகிய அலங்காரமும் தரையிலிருந்து சீலிங் வரையிலான ஜன்னல்களும் ரெஸ்டாரண்டில் இருப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. அந்த அறையிலுள்ளவர்களின் உரையாடல்களில் இருந்து மியூனிக் “Googlerகளின்” மொழி ஆங்கிலம் என்பது தெளிவாகிறது, மேலும் சிலிகான் பள்ளத்தாக்கின் தாக்கம் அத்துடன் நின்றுவிடவில்லை. 2016ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தச் கட்டிடத்தில் ஃபிட்னெஸ் ஸ்டூடியோ, காஃபி பார், பில்லியர்ட் அறை, நூலகம் ஆகியவை உள்ளன. உலகம் முழுவதுமிருந்து சுமார் 750 பணியாளர்கள் இந்தக் கிளையில் பணிபுரிகின்றனர் அதில் பெரும்பாலானோர் சாஃப்ட்வேர் டெவெலப்பர்கள். மவுண்டைன் வியூவின் Google தலைமையகத்தில் உள்ள சக பணியாளர்களுடனான வீடியோ கான்ஃபிரன்ஸ்கள் மாலைநேரத்திலேயே தொடங்கும் என்பதால் பெரும்பாலும் மாலை நேரத்தில்தான் அவர்கள் பணிபுரிவர்.
பயனர்களின் தரவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த முழுமையான வெளிப்படைத்தன்மையையும் கட்டுப்பாட்டையும் பயனர்களுக்கு வழங்குவதே முக்கிய இலக்காகும்
இருந்தாலும் Googleளின் மியூனிக் செயல்பாடுகளில் இன்னும் ஜெர்மானிய தாக்கத்தை உணர முடிகிறது. உள்ளூர்ச் சுரங்கப்பாதை நிலையங்கள் போன்று வடிவமைக்கப்பட்ட கான்ஃபிரன்ஸ் அறைகள், கிளாசிக் பவேரியன் பாணியில் அமைக்கப்பட்ட மரப் பேனல் பதிக்கப்பட்ட அறைகள் போன்ற பல அற்புதமான விஷயங்களில் இருந்து இது ஓரளவு தெரிந்தது. ஆனால் ஹோல்ஃபெல்டரைப் பொறுத்தவரை தளத்தைப் பற்றிய பொதுவான மற்றும் "நமது உள்ளூர் சாதகங்கள்" என்று அவர் பெருமையுடன் குறிப்பிடும் ஜெர்மன் விஷயம், மியூனிக் பொறியாளர்கள்தான். “இங்கே மியூனிக்கில், Googleளுக்காகவும் உலகம் முழுவதுமுள்ள பயனர்களுக்காகவும் தரவுத் தனியுரிமை தொடர்பான தயாரிப்புகளையும் சேவைகளையும் உருவாக்கி வருகிறோம்” என்கிறார் ஹோல்ஃபெல்டர். பயனர்களின் தரவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த முழுமையான வெளிப்படைத்தன்மையையும் கட்டுப்பாட்டையும் பயனர்களுக்கு வழங்குவதே இதன் முக்கிய இலக்காகும். இதில் வேலை செய்ய பணியாளர்களுக்கு ஏற்ற இடம் ஜெர்மனிதான்.
உலகளவில் Google தயாரிப்புகளின் தரவுத் தனியுரிமைத் தரநிலைகளுக்குப் பொறுப்பான பொறியியல் இயக்குநர் ஸ்டீபன் மிக்லிட்ஸும் மியூனிக் அலுவலகத்தில்தான் பணிபுரிகிறார். 2007ம் ஆண்டு குழுவில் சேர்ந்த இவர், மியூனிக் அலுவலகத்தில் தொடக்கம் முதலே பணிபுரிந்து வரும் Googlerகளில் ஒருவர். 'எனது கணக்கு (My Account)' சேவையை முதலில் தொடங்கியவர்கள் மிக்லிட்ஸும் அவரது குழுவினரும்தான், அதுவே பின்னர் Google கணக்கு என்று ஆனது. Googleளின் தேடல் இன்ஜின், YouTube போன்றவற்றைப் பயன்படுத்துபவர்களும் Googleளில் கணக்கு வைத்திருக்கும் எவரும் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். அமைப்புகளை எளிதாக நிர்வகிப்பதற்கு 'Google கணக்கு' உதவுகிறது. பயனர்களின் கணக்கு வெளிப்புறத் தாக்குதலுக்கு எதிராக எந்தளவு பாதுகாப்பாக உள்ளது எனப் பார்க்க, பாதுகாப்புச் சரிபார்ப்பை அவர்கள் இயக்கிக் கொள்ளலாம். மேலும் எந்தெந்தத் தனிப்பட்ட தகவல்கள் Googleளின் சேவையகங்களில் சேமிக்கப்படுகின்றன எவை சேமிக்கப்படவில்லை என்பதைத் தீர்மானிக்க தனியுரிமைச் சரிபார்ப்பைப் பயன்படுத்தலாம்.
"இங்கே மியூனிக்கில், Googleளுக்காகவும் உலகம் முழுவதுமுள்ள பயனர்களுக்காகவும் தரவுத் தனியுரிமை தொடர்பான தயாரிப்புகளையும் சேவைகளையும் உருவாக்கி வருகிறோம்."
வீலாண்ட் ஹோல்ஃபெல்டர்
“இந்த வகையான அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கும் மையப் பகுதியை உருவாக்குவதே இதன் யோசனையாகும்” என்கிறார் மிக்லிட்ஸ். “அனைத்து உள்ளமைவு அமைப்புகளையும் உள்ளடக்கி இரண்டு பக்கங்களில் பதில்களைத் தொகுக்க விரும்பினோம். ஆனால் பயனர்களைச் சலிப்படைய வைக்காத வகையில் மிக முக்கியமான படிகளில் கவனம் செலுத்துகிறோம்”. அப்போது "மைக்ரோ கிச்சன்கள்" என்று அழைக்கப்படும் Google பணியாளர்களுக்கான கிச்சன்கள் ஒன்றிலிருந்து மிக்லிட்ஸ் காஃபி எடுத்து வந்திருந்தார். அந்தக் கிச்சனில் ஆறு அடி உயரமுள்ள ஒரு ஃப்ரிட்ஜ் முழுவதும் பானங்களால் நிரப்பப்பட்டிருந்தது. ஃப்ரிட்ஜில் உள்ள கண்ணாடிக் கதவு வழியாகப் பார்க்கும்போது மேலேயுள்ள இரண்டு வரிசைகளில் மினரல் வாட்டர் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. ஃப்ரிட்ஜின் மீதப் பகுதியில் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்த கண்ணாடியின் பின்னே பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முதலில் ஸ்பார்க்ளிங் ஜூஸ்கள், அடுத்து வழக்கமான ஜூஸ்கள், இறுதியாகக் கீழ் அலமாரிகளில் ஐஸ்டு டீயும் ஆரோக்கியமற்ற ஃபிஸ்ஸி டிரிங்க்குகளும் வைக்கப்பட்டிருந்தன. “பொறியாளர்களான நாங்கள் எதையும் விட்டுவைக்க விரும்புவதில்லை” என்றார் மிக்லிட்ஸ்.
ஹோல்ஃபெல்டர் மற்றும் மிக்லிட்ஸின் கருத்தின்படி தொழில்துறையில் வேறு எந்த நிறுவனமும் தனது பயனர்களின் தரவை ஆன்லைன் தாக்குதல்களிலிருந்து இந்தளவிற்குப் பாதுகாப்பதில்லை. Google சேவையகத்தின் உள்கட்டமைப்பு உலகிலேயே மிகப் பாதுகாப்பான உள்கட்டமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் பாதுகாப்பு அமைப்பு கடினமானது, மேலும் பல நிலைகளை உள்ளடக்கியது. என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட வடிவில் உலகம் முழுவதுமுள்ள தரவு மையங்களில் தரவு சேமிக்கப்படுகிறது. அதிகபட்சப் பாதுகாப்பைக் கொண்ட சிறைச்சாலைகள் போன்று இதைக் கருதலாம். “எங்கள் பயோமெட்ரிக் முறையில் பாதுகாக்கப்பட்ட தரவு மையங்களில் உள்ள ஒருவரின் கையில் உங்கள் மின்னஞ்சலைக் கொண்ட ஹார்டு டிரைவ் கிடைத்தாலும் அதைக் கொண்டு அவரால் எதுவும் செய்ய முடியாது” என்கிறார் ஹோல்ஃபெல்டர். “அதில் உள்ள அனைத்துத் தகவல்களும் பல்வேறு தரவு மையங்களில் விரவியிருக்கும், மேலும் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டிருக்கும்”. அத்துடன் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் மீறி Googleளின் இடைமுகங்களிலோ தயாரிப்புகளிலோ குறைபாடுகள் இருப்பதாக ஹேக்கர்கள் கண்டறிந்தால் தாராளமான ரிவார்டுகளை நிறுவனம் வழங்குகிறது. எனவே சைபர் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்புக் குறைபாடுகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதைவிட அவற்றைப் புகாரளிப்பதே மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
"தனியுரிமை & பாதுகாப்பு தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கும் மையப் பகுதியை உருவாக்குவதே இதன் யோசனையாகும்."
ஸ்டீஃபன் மிக்லிட்ஸ்
ஹோல்ஃபெல்டர் மற்றும் மிக்லிட்ஸுடனான உரையாடலில் இருந்து இரண்டு முக்கியமான செய்திகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக, Google மூலம் மின்னஞ்சல் கணக்கை அமைக்கும் அல்லது கிளவுடில் படங்களைப் பதிவேற்றும் எவரும் அனைத்து மெசேஜ்களும் படங்களும் முடிந்தவரை பாதுகாப்பாக இருக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, இணையத்தில் தேடவும் உலாவவும் Googleளைப் பயன்படுத்தும் எவரும் எந்தத் தரவை Google சேகரிக்கவும் பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும். “தனிப்பட்ட முறையில், டிராஃபிக் குறித்த அறிவிப்புகளை எனது மொபைல் வழங்குவது எனக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. உதாரணமாக, நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளதால் விமான நிலையத்தைச் சரியான நேரத்தில் அடைய இப்போதே நீங்கள் புறப்பட வேண்டும் எனத் தெரிவிக்கும்” என்கிறார் ஹோல்ஃபெல்டர். “ஆனால் இந்தச் செயல்பாட்டை இயக்கலாமா வேண்டாமா என்பதைப் பயனரே தீர்மானிக்க முடியும்.”
Google அதிகம் வருமானம் பெறும் விளம்பரங்களுக்கும் இதேபோன்று செய்து கொள்ளலாம். உங்களுக்குத் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்ட தரவு உதவுகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு புதிய சாம்பல் நிற சோஃபாவைத் தேடுகிறீர்கள் எனில் அந்தத் தேடலுடன் தொடர்புடைய விளம்பரங்கள் உங்களுக்குக் காட்டப்படும். சிலருக்கு இது பயனுள்ளதாக இருக்கும், அதே சமயம் மற்றவர்களுக்கு இது தொந்தரவாக இருக்கலாம். இந்த 'விளம்பரப் பிரத்தியேகமாக்கல்' அம்சத்தை முடக்கிக்கொள்ள முடியும். “அதுவும் Google கணக்கு மூலம்” என்று மிக்லிட்ஸ் விவரிக்கிறார். இந்த அம்சத்தை முடக்கியிருந்தாலும் பயனர்களுக்கு விளம்பரங்கள் காட்டப்படும், ஆனால் அவர்களின் ஆர்வங்களுக்கு ஏற்ற விளம்பரங்கள் காட்டப்படாது. “எங்கள் பயனர்களுக்குத் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்ட தரவைப் பயன்படுத்துகிறோம். ஆனால் எந்தவொரு தனிப்பட்ட தரவையும் விற்கமாட்டோம்.” என்று ஹோல்ஃபெல்டர் கூறுகிறார்.
படங்கள்: மிர்சிக் & ஜரிஷ்
இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்
உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
மேலும் அறிக