"தரவுப் பாதுகாப்பு சிக்கலானதாக இருக்கக்கூடாது."
2019ம் ஆண்டு முதல் மியூனிக்கில் உள்ள Google பாதுகாப்புப் பொறியியல் மையத்தில் (GSEC - Google Safety Engineering Center) இணையத்தில் உள்ள தரவுத் தனியுரிமை, தரவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் Google கவனம் செலுத்தி வருகிறது. சைட்-லீடான வீலாண்ட் ஹோல்ஃபெல்டர் GSEC மையத்தில் மேற்கொள்ளப்படும் சமீபத்திய மேம்பாடுகள், அவரது குழு பணிபுரியும் முறைகள், மியூனிக் நகரம் டிஜிட்டல் நிறுவனங்களுக்கான சிறந்த இடமாக இருப்பது ஆகியவை குறித்துக் கலந்துரையாடுகிறார்.
டாக்டர். ஹோல்ஃபெல்டர், சுருக்கமாக GSEC என்றழைக்கப்படும் Google பாதுகாப்புப் பொறியியல் மையம் 2019ல் மியூனிக்கில் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் என்ன நடக்கிறது?
GSEC என்பது Googleளின் உலகளாவிய தனியுரிமை மற்றும் பாதுகாப்புப் பொறியியல் மையமாகும். இணையப் பாதுகாப்பை மேம்படுத்த நாங்கள் இங்குதான் புதிய தயாரிப்புகளை உருவாக்குகிறோம், பயனர் தேவைகளைக் கண்டறிகிறோம், எங்கள் யோசனைகளைப் பகிர்ந்து எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.
ஜெர்மனியில் தரவுத் தனியுரிமைக்கும் பாதுகாப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. Google பாதுகாப்புப் பொறியியல் மையத்தை இங்கு நிறுவியதில் உள்ளூர் பாரம்பரியத்திற்கு எந்தளவு முக்கியப் பங்கு உள்ளது?
மிகவும் முக்கியப் பங்கு உள்ளது. நாங்கள் ஐரோப்பாவின் மையத்தில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கான மேம்பாட்டுக் குழுக்களை அமைத்தது தற்செயலானது அல்ல. ஆன்லைன் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து ஐரோப்பியர்கள் எப்படி யோசிக்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கும் நீண்ட பாரம்பரியம் ஜெர்மனியில் உள்ளது. எனவே மியூனிக்கில் Google பொறியியல் அலுவலகத்தை முதன்முதலில் திறந்தபோது நாங்கள் இங்கு நிறுவிய முதற்கட்டக் குழுக்களில் இவையும் அடங்கும். மியூனிக்கில் பத்து ஆண்டுகளாக இந்தக் குழுக்களை மேம்படுத்திய பிறகு, நாங்கள் ஆன்லைன் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கான வரம்பை விரிவுபடுத்தவும் பயனர்களின் கருத்துகளைப் கேட்கவும் பல்வேறு பின்னணிகளைச் சார்ந்த பயனர்கள் மற்றும் முக்கியப் பங்குவகிப்போருடன் கலந்தாலோசிக்கவும் விரும்பினோம். எனவேதான், இந்தச் சிக்கல்களில் அதிகக் கவனம் செலுத்தும் மியூனிக் நகரத்தில் GSEC மையத்தை அமைப்பது சிறந்த யோசனையாக இருந்தது. ஐரோப்பியாவின் பொதுவான தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கான (GDPR - General Data Protection Regulation) தேவைகளை எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் பூர்த்திசெய்வதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளோம். இந்தப் புரிதலும் விழிப்புணர்வும் பிற நாடுகளிலும் பரவி வருகின்றன. உண்மையாகக் கூற வேண்டுமெனில், தரவுத் தனியுரிமையும் பாதுகாப்பும் உலகம் முழுவதும் மிகுந்த கவனத்தைப் பெற்று வருகின்றன.
GSEC 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களைக் கொண்டுள்ள சர்வதேசப் பணியிடமாகும்.
சர்வதேசத் தயாரிப்புகளில் பணிபுரியும்போது பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் நமக்கு இருக்க வேண்டும். எங்கள் பணியாளர்கள் முடிந்தவரை பயனர்களின் நிலையில் இருந்து பார்த்தால் இது சாத்தியமாகும். எனினும், தற்போது நாங்கள் அடைந்திருக்க வேண்டிய முன்னேற்றத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட நாங்கள் இன்னும் அடையவில்லை. மேலும் பன்முகத்தன்மை கொண்ட அணிகளை (பாலினம் உட்பட, ஆனால் இது மட்டுமே அல்ல) உருவாக்குவதை எங்கள் தொலைநோக்கு இலக்காகக் கொண்டுள்ளோம். உதாரணமாக, கணினி அறிவியல் பயிலும் மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகைகள் வழங்குவதன் மூலமோ எங்கள் உள்ளூர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழிகாட்டித் திட்டம் நடத்தி மாணவிகளுக்கு உதவுவதன் மூலமோ இந்த இலக்கை அடைய முடியும்.
GSECல் ஒரு வழக்கமான நாள் எப்படி இருக்கும்?
ஒவ்வொரு நாளும் Google தயாரிப்புகளில் (Google கணக்கு, Google Chrome உலாவி போன்றவை) 200க்கும் மேற்பட்ட தனியுரிமைப் பொறியாளர்கள் பணிபுரிகின்றனர். ஆர்வமுள்ளவர்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி, நுண் பாதுகாப்பு நிகழ்வுகள் (Codelabs போன்றவை) உள்ளிட்டவற்றுக்கான பயிலரங்குகளையும் நாங்கள் நடத்துகிறோம். இது குறிப்பாக எனக்கு முக்கியமானது. ஏனெனில் இணையம் மிக விரைவாக மாற்றமடைந்து வருவதால் இணையப் பாதுகாப்பு தொடர்பான கூடுதல் தகவல்களை நாங்கள் வழங்க வேண்டியுள்ளது.
இணையப் பயனர்கள் தினசரி எதிர்கொள்பவற்றில் நீங்கள் என்ன மாதிரியான விஷயங்களில் பணிபுரிகிறீர்கள்?
நீங்கள் Google தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், பிரத்தியேகமாக்கலுக்கு (உதாரணமாக, சிறந்த தேடல் முடிவுகளை வழங்க) பயன்படுத்தப்படும் தரவு வகை குறித்து நீங்கள் வியப்படைந்திருக்கக்கூடும். வெவ்வேறு தயாரிப்புகளில் உங்களுக்காக Googleளை இன்னும் சிறப்பாகச் செயல்பட வைக்க உங்கள் தகவல்கள், தனியுரிமை, பாதுகாப்பு ஆகியவற்றை நிர்வகிப்பதற்கு Google கணக்கு உங்களுக்கு உதவும். உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க எந்தத் தரவு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைச் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள், விளம்பர அமைப்புகள் போன்ற கட்டுப்பாடுகள் மூலம் நீங்கள் தீர்மானிக்கலாம். இதனால் Googleளின் அனைத்துத் தயாரிப்புகளும் சேவைகளும் உங்களுக்காகச் சிறப்பாகச் செயல்படக்கூடும். இதற்காகவே நாங்கள் தனியுரிமைச் சரிபார்ப்பை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் உங்கள் Google கணக்கில் தனியுரிமை விருப்பங்களை விரைவாக அமைத்துக் கொள்ளலாம். Chrome, Android ஆகியவற்றுக்கு நாங்கள் Password Managerரை உருவாக்கியுள்ளோம். உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு இணையதளத்திற்கும் ஆப்ஸுக்கும் இது ஒரு கடவுச்சொல்லைத் தானாக உருவாக்கிச் சேமிக்கும். கடவுச்சொல் சரிபார்ப்பைப் பயன்படுத்தியும் பயனர்கள் தங்கள் கடவுச்சொற்களில் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளனவா என்று சரிபார்த்துக்கொள்ளலாம். இதன் மூலம், நாங்கள் அறிந்த தரவு மீறலில் அவர்களது கடவுச்சொல் பாதுகாப்பை இழந்துள்ளதா என்பதை அவர்கள் அறிந்துகொள்ள முடியும். அதன் பிறகு அவர்களது கடவுச்சொற்களை மாற்றுவது தொடர்பான வழிமுறைகள் அவர்களுக்கு வழங்கப்படும். குறிப்பாக, கடவுச்சொல் பாதுகாப்பு தொடர்பான இந்தக் கருவிகளில் GSEC மையத்தின் பங்களிப்பு குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்.
ஏன் என்று விளக்க முடியுமா?
Password Manager ஃபிஷிங் இணையதளங்களின் ஏமாற்று முயற்சிகளை முறியடிக்கும். எனவே நீங்கள் இதன் மூலம் ஒவ்வொரு இணையதளத்திற்கும் ஒரு புதிய, வலிமையான கடவுச்சொல்லை உருவாக்கலாம். அவற்றை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. இதன் மூலம், கடவுச்சொற்களை ஹேக்கர்கள் ஊகிப்பதைத் தடுக்க முடிகிறது. அத்துடன், பல்வேறு தளங்களில் நீங்கள் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதையும் இது தடுக்கிறது.
அதில் என்ன சிக்கல் உள்ளது?
நான் எனது மனைவிக்குப் பூக்கள் ஆர்டர் செய்வதற்காக ஓர் இணையதளத்திற்குச் சென்று, அவசரத்தில் வேறொரு கணக்கிற்கு நான் பயன்படுத்தும் கடவுச்சொல்லையே இந்தத் தளத்தில் எனது வாடிக்கையாளர் கணக்கிற்கான கடவுச்சொல்லாக அமைக்கிறேன் என வைத்துக் கொள்வோம். அந்தப் பூக்கடையின் சேவையகத்தை அணுகி ஹேக்கர்களால் இந்தக் கடவுச்சொல்லைக் கண்டறிய முடிந்தால், இதே கடவுச்சொல்லைப் பயன்படுத்தி எனது மின்னஞ்சல் கணக்கையோ Google கணக்கையோ கூட அணுக முடிகிறதா என்பதை அவர்கள் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும். அதன் பிறகு, நான் பயன்படுத்தும் பிற கணக்குகளுக்கு அவர்களால் புதிய கடவுச்சொற்களை உருவாக்க முடியும். ஒவ்வொரு தளத்திற்கும் வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களைத் தானாக உருவாக்குவதன் மூலம் Password Manager நீங்கள் ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
“சர்வதேசத் தயாரிப்புகளில் பணிபுரியும்போது பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் நமக்கு இருக்க வேண்டும்.”
Googleளில் பொறியியல் துணைத் தலைவராகவும் சைட்-லீடாகவும் உள்ள வீலாண்ட் ஹோல்ஃபெல்டர்
மேலும் கூடுதல் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் எவையேனும் உள்ளனவா?
ஆம். உங்களிடம் Google கணக்கு இருந்தால் நீங்கள் இருபடி அங்கீகாரத்தையும் பயன்படுத்தலாம். அதாவது, ஒரு புதிய சாதனத்தில் உங்கள் கணக்கில் உள்நுழையும் ஒவ்வொரு முறையும் உங்கள் மொபைலுக்கு நாங்கள் அனுப்பும் குறியீட்டை நீங்கள் பயன்படுத்த வேண்டும். எனவே, வெளிநாட்டிலுள்ள ஒருவர் உங்கள் கடவுச்சொல்லை ஹேக் செய்தாலும் இந்த இரண்டாவது படியை மேற்கொள்ளாமல் அவர் உங்கள் கணக்கை அணுக முடியாது. உதாரணமாக, ஆன்லைனில் எனது கணக்கில் மிக முக்கியமான தகவல்களை நான் தனிப்பட்ட முறையில் வைத்துள்ளேன். எனவே, எனது கணக்கிற்கு இந்தக் கூடுதல் பாதுகாப்பு இல்லாமல் என்னால் நிம்மதியாக உறங்க முடியாது.
GSEC மையத்தில் இந்த வகையான புதிய தயாரிப்புகளை எப்படி உருவாக்குகிறீர்கள்?
உதாரணமாக, எங்கள் 'பயனர் அனுபவ ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு' வரும்படியோ ஆன்லைன் நேர்காணல்களில் பங்கேற்கும்படியோ நாங்கள் பயனர்களை அழைப்போம். அவர்கள் இணையத்தை எப்படிப் பயன்படுத்துகின்றனர், அதில் எப்படித் தேடல்களை மேற்கொள்கின்றனர் என்பதை இதன் மூலம் நாங்கள் அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம், அவர்களது தனியுரிமை விருப்பங்கள் குறித்து தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு என்னென்ன கருவிகளும் உதவியும் அவர்களுக்குப் பொதுவாகத் தேவைப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முடியும். “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் Chrome உலாவியை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள்?” என்பது போன்ற கேள்விகளைப் பயனர்களிடம் கேட்பதோடு எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும்படி அவர்களிடம் வலியுறுத்துவோம். இதன் மூலம் அந்தத் தயாரிப்புகள் குறித்த அவர்களது கருத்தை நாங்கள் மதிப்பிட முடியும். இந்தப் புள்ளிவிவரங்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் இவற்றின் மூலம், எங்கள் தகவல்கள் சரியான இடத்தில் காட்டப்படுகின்றனவா என்பதையும் இடைமுகமும் பட்டன்களும் பயனுள்ளவையாக இருக்கின்றனவா என்பதையும் நாங்கள் புரிந்துகொள்ள முடியும். எங்கள் பயனர்களின் தேவைகளை எங்கள் தயாரிப்புகள் பூர்த்திசெய்வதை நாங்கள் இதன் மூலம் உறுதிசெய்துகொள்ள முடியும். இணையத்தில் பாதுகாப்பாக உணர நீங்கள் பாதுகாப்பு நிபுணராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பது எங்கள் கருத்தாகும்.
மற்ற விஷயங்களை மேம்படுத்தும் அதே வேளையில், நீங்கள் மூன்றாம் தரப்புக் குக்கீகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். குக்கீகள் என்றால் என்ன?
இணையம் உருவான காலத்திலிருந்தே குக்கீகளும் உள்ளன. இவை கம்ப்யூட்டரில் தகவல்களைச் சேமிக்க இணையதள வழங்குநர்கள் பயன்படுத்தும் சிறிய ஃபைல்களாகும். இன்றைய காலகட்டத்திலும் குக்கீகள் இணையத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, ஓர் ஆன்லைன் கணக்கில் உங்களை உள்நுழைந்தபடியே வைத்திருப்பதற்கோ இ-காமர்ஸ் இணையதளங்களில் ஷாப்பிங் கார்ட்டுகளைச் செயல்படுத்துவதற்கோ முதல் தரப்புக் குக்கீகள் பயன்படுகின்றன. தொடர்புடைய விளம்பரங்களைக் காட்சிப்படுத்த அனுமதிக்கும் மூன்றாம் தரப்புக் குக்கீகளும் உள்ளன. குறிப்பிட்ட ஒரு பொருளை நீங்கள் ஆன்லைனில் தேடியதையும் மூன்றாம் தரப்புக் குக்கீகளால் பதிவுசெய்துகொள்ள முடியும். எனவே, நீங்கள் ஒரு தளத்தில் டிவியைத் தேடும்போது குக்கீயால் அதைப் பதிவுசெய்துகொள்ள முடியும். பிறகு வேறொரு தளத்திலிருந்து அதேபோன்ற டிவியின் விளம்பரத்தை அந்தக் குக்கீ உங்களுக்குக் காட்டக்கூடும்.
அது ஏன் அப்படி?
இணையம் என்பது பெரும்பாலும் கட்டணமின்றி அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் பிளாட்ஃபார்ம் ஆகும். விளம்பரங்கள் மூலமே இணையதள உள்ளடக்கங்களுக்கு முதன்மையாக நிதியளிக்கப்படுகிறது. அந்த விளம்பரங்கள் எந்தளவிற்குத் தொடர்புடையவையாக இருக்கின்றனவோ அந்தளவிற்குப் பயனர்களும் வழங்குநர்களும் பயனடைவார்கள்.
ஆன்லைனில் பயனர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் மூன்றாம் தரப்புக் குக்கீகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இதைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிகள் குறித்து நீங்கள் தற்போது ஆய்வுசெய்து வருகிறீர்கள். சரியா?
ஆம். தற்போது நாங்கள் “தனியுரிமை சாண்ட்பாக்ஸ்" எனும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறோம். இதன் விளைவாக, எதிர்காலத்தில் விளம்பரதாரர்கள் எனது குக்கீகள் மூலம் என்னை அடையாளங்காண முடியாது. மூன்றாம் தரப்புக் குக்கீகள் பயனர் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை என்ற பரந்த கருத்து இணையச் சமூகத்தில் நிலவி வருகிறது. பயனர்கள் மேலும் கூடுதலான தனியுரிமையை (தங்கள் தரவு பயன்படுத்தப்படும் முறை தொடர்பான வெளிப்படைத்தன்மை, விருப்பம், கட்டுப்பாடு ஆகியவை உட்பட) எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ய இணையச் சூழலமைப்பு வளர்ச்சியடைய வேண்டும் என்பது தெளிவாகப் புரிகிறது. பலதளக் கண்காணிப்பை முடிவுக்குக் கொண்டுவர, மூன்றாம் தரப்புக் குக்கீகளையும் பிற வெளிப்படைத்தன்மையற்ற தொழில்நுட்பங்களையும் (உலாவிக் கைரேகை போன்றவை) இணையத்தில் நிரந்தரமாகத் தடைசெய்ய வேண்டும். ஆனால் கடந்த 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, பல முக்கிய இணையத் திறன்களும் இதே தொழில்நுட்பங்களைச் சார்ந்திருக்கின்றன. பிசினஸ்களை மேம்படுத்தவும் இணையத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் வெளியீட்டாளர்களுக்கு உதவுதல், அனைவருக்கும் உள்ளடக்கத்திற்கான அணுகல் இருப்பதை உறுதிப்படுத்துதல், பயனர்களின் தனிப்பட்ட சாதனங்களில் அவர்களுக்குச் சிறந்த அனுபவங்களை வழங்குதல், ரோபோக்களிடம் இருந்தும் மோசடிக்காரர்களிடம் இருந்தும் உண்மையான பயனர்களை வேறுபடுத்திக் காட்டுதல் போன்ற பல முக்கியத் திறன்களை இணையம் இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். வெளியீட்டாளர்களை ஆதரிக்கும் அதே சமயம் பயனர்களுக்கு இணையத்தை மேலும் பாதுகாப்பானதாகவும் தனிப்பட்டதாகவும் மாற்றுவதே 'தனியுரிமை சாண்ட்பாக்ஸ்' எனும் ஓப்பன் சோர்ஸ் முன்னெடுப்பிற்கான எங்கள் இலக்காகும்.
இந்தச் சிக்கலை Google எப்படிச் சரிசெய்கிறது?
தனியுரிமை சாண்ட்பாக்ஸ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, நாங்கள் இணையச் சமூகத்துடன் பணியாற்றி ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றோம். இது பயனர் தகவல்களைத் தனிப்பட்டதாக வைத்திருப்பதோடு ஊடுருவிக் கண்காணிக்கும் உத்திகளையும் (கைரேகை போன்றவை) தடுக்கிறது. அத்துடன் வலைதளங்கள் பயனுள்ள விளம்பரங்களை வழங்கி அதன் மூலம் அவற்றின் பிசினஸுக்குப் பணம் ஈட்டுவதற்கும் உதவுகிறது. சட்டத்துறையினர், தனியுரிமை வழக்கறிஞர்கள், டெவெலப்பர்கள் ஆகியோரிடமிருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் FloC தொழில்நுட்பத்திற்குப் பதிலாக ஆர்வம் சார்ந்த விளம்பரச் சேவைக்காகத் தனியுரிமை சாண்ட்பாக்ஸில் புதிதாக முன்மொழியப்பட்ட Topics APIயை இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் சோதனை வெளியீடாக அறிமுகப்படுத்தினோம். பயனர்கள் பார்க்கும் இணையதளங்களின் அடிப்படையில் (உதாரணமாக, விளையாட்டு) பொருத்தமான விளம்பரங்களை விளம்பரதாரர்கள் காட்டுவதற்கு இது உதவும். இவை அனைத்தும் பயனர்களுக்குத் தனியுரிமைப் பாதுகாப்பு நிறைந்த வகையில் நடைபெறும். முன்பு பயனர்களை அடையாளங்காண குக்கீகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் Topicsஸின் நோக்கம் என்னவெனில், நீங்கள் தனிப்பட்ட முறையில் இதுவரை இணையத்தில் பார்த்தவை குறித்த தகவல்கள் உங்கள் உலாவி/சாதனத்திலேயே இருக்கும். அவை விளம்பரதாரர்கள் உட்பட யாருடனும் பகிரப்படாது. அதாவது, இணையம் முழுவதும் கண்காணிக்க வேண்டிய அவசியமின்றி விளம்பரதாரர்கள் தொடர்புடைய விளம்பரங்களையும் உள்ளடக்கத்தையும் தொடர்ந்து வழங்க முடியும்.
தனியுரிமை சாண்ட்பாக்ஸிற்கான பிற முன்மொழிவுகளிலும் (FLEDGE, அளவீடு சார்ந்த APIகள் உட்பட) நாங்கள் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறோம். மேலும், மொத்தச் சூழலமைப்பிற்கும் ஏற்ற வகையில் எங்கள் முன்மொழிவுகளை மேம்படுத்துவதை உறுதிசெய்ய தொடர்ந்து யுனைடெட் கிங்டமின் 'காம்பெட்டிஷன் அண்ட் மார்க்கெட்ஸ் அத்தாரிட்டியுடன் (CMA)' இணைந்து பணியாற்றி வருகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களையும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களையும் நிறுவுவதற்கான பிரபலமான இடமாக மியூனிக் நகரம் மாறியுள்ளது. மியூனிக்கில் உள்ள Google பொறியியல் மையத்தின் சைட்-லீடாக இதுகுறித்த உங்கள் அனுபவம் என்ன?
மியூனிக் நகரம் மிகச் சிறந்த மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. Apple, Amazon, Google ஆகிய நிறுவனங்களும் Celonis (தரவுப் பகுப்பாய்வுச் சேவைகளை வழங்கும் யூனிகார்ன் நிறுவனம்) போன்ற பிற அற்புதமான நிறுவனங்களும் இங்கு முதலீடு செய்து அவற்றின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகின்றன. இங்கு வலிமையான அடித்தளம் கொண்ட பல்வேறு தொழில்நுட்ப வணிகங்கள் செயல்படுவதால், எங்கும் இல்லாத அளவிற்கு அதிகளவிலான B2B நிறுவனங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் தொழில்முனைவு மையங்களை இயக்கும் சில அற்புதமான பல்கலைக்கழகங்களும் (LMU, TUM போன்றவை) இங்குள்ளன. கூடுதலாக, பவேரிய மாநில அரசு அதன் “ஹை-டெக் அஜெண்டா” செயல் திட்டம் மூலம் ஈடு இணையற்ற வகையில் ஆதரவளித்து வருகிறது. உதாரணமாக, செயற்கை நுண்ணறிவிலும் குவாண்டம் கம்ப்யூட்டிங்கிலும் பெரியளவில் முதலீடுகள் செய்யப்படுவதை நாங்கள் பார்க்கிறோம் – இது மிக அருமையான விஷயம். நீண்டகால உள்ளூர் பாரம்பரியம், பொறியியலிலும் தொழில்நுட்பத்திலும் பெற்றுள்ள நிபுணத்துவம், மியூனிக்கின் வலுவான பொருளாதார நிலை, சிறந்த அரசியல் ஆதரவு, சிறந்த கல்வி நிறுவனங்கள், உயர்தர வாழ்கை முறை ஆகியவையே மியூனிக் மிகச் சிறந்த நகரமாக விளங்குவதற்கான காரணங்களாகும்.
மியூனிக்கில் உள்ள புதிய Google அலுவலகங்களில் தற்போது கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் உங்கள் திட்டங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?
பெருந்தொற்றுக்கு முன், எங்கள் பெரும்பாலான நேரத்தை அலுவலகத்தில் செலவழித்தோம். பணியாளர்கள் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்கவும் இணைந்து தயாரிப்புகளை உருவாக்கவும் அங்கு நிறைய கஃபேக்களும் மீட்டிங் அறைகளும் உணவகங்களும் உள்ளன. பெருந்தொற்றுக் காலகட்டத்தின்போது இந்தப் பணிபுரியும் முறை பெரிதளவில் மாறிவிட்டது. கடந்த ஆண்டில் நாங்கள் கற்றுக்கொண்ட பல விஷயங்களை எங்கள் புதிய மற்றும் வியப்பூட்டும் ஆர்நுல்ஃப்போஸ்ட் (Arnulfpost) திட்டப்பணியில் தற்போது சேர்த்து வருகிறோம்.
தொலைநிலையில் இருந்து பணிபுரியும் முறையிலும் அதே பணிச் சூழலை உருவாக்க முடியுமா?
எங்கள் நிறுவனம் கிளவுடில் உருவானது, கிளவுடிலேயே வளர்ந்தது, நாங்கள் அனைவரும் கிளவுடிலேயே வாழ்கின்றோம். எனவே ஆன்லைனில் காலைநேர மீட்டிங்குகளிலோ வீடியோ கான்ஃபிரன்ஸ்களிலோ பங்கேற்குமாறு எங்கள் பணியாளர்களை ஊக்குவிக்க முயல்கிறோம். எனினும், இத்தனை ஆண்டுகளாக அலுவலகத்திலேயே குழுவாகப் பணிசெய்து வந்த பழக்கத்தை இனி தொடர முடியாது என நினைக்கிறோம். நாங்கள் பணியமர்த்தியுள்ள பல பேர் இதுவரை எங்கள் அலுவலகங்களுக்கு நேரில் வந்ததே இல்லை. ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கையாளுவது அனைத்து நிர்வாகிகளுக்கும் சவாலாக உள்ளது.
இதனால் குறிப்பாக மியூனிக்கில் உள்ள GSEC மையத்தில் எதிர்காலத்தில் பணிபுரியும் முறையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்?
புதுமையான யோசனைகள் தற்செயலாகக் கிடைப்பதற்கு பணியாளர்கள் அலுவலகத்தில் ஒன்றாகப் பணிசெய்வது அவசியம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே நாங்கள் முழுமையாக விர்ச்சுவல் முறையில் பணிபுரிய மாட்டோம். ஆனால், பணிபுரிய அனைவருக்கும் நிலையான இடம் தேவையா என்று எங்களை நாங்களே கேட்டுக்கொண்டோம். எங்கள் விற்பனைக் குழுவினரால் ஏற்கெனவே தங்களுக்கு விருப்பமான நேரங்களில் பணிபுரிய முடிகிறது. எங்கள் பொறியாளர்களின் பெரும்பாலான மேம்பாட்டுக் கருவிகள் கிளவுடுக்கு நகர்த்தப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில், ஒவ்வொரு குழுவினரும் எத்தனை இணக்கமான பணியிடங்களையும் நிலையான பணியிடங்களையும் வைத்திருக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்துக்கொள்ள முடியும். செயல்திறன்மிக்க பணியிட ஒதுக்கீட்டுக் கருவிகளையும் கூட்டுப்பணிக்கான புதிய இடங்களையும் வழங்குவதன் மூலம் பணிபுரிவதற்கான புதிய வழிகளை இன்று நாங்கள் கண்டறிந்து வருகிறோம். தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் சூழலில் தனிநபரின் பணியிட விருப்பத்தேர்வுகள், திட்ட அட்டவணைகள் ஆகியவற்றின் அடிப்படையில் குழுக்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய இந்தப் புதிய வழிகள் உதவுகின்றன.
படங்கள்: சீமா டெஹ்கனி
இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்
உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
மேலும் அறிக