Chromeமில் உங்களுக்கான பிரத்தியேக இடம்
நிஜ வாழ்க்கை உபயோகம் எப்படி Chrome உலாவியின் மேம்பாட்டிற்கு உதவியது? Google பாதுகாப்புப் பொறியியல் மையத்தைச் சேர்ந்த சபீன் போர்ஸேவும் டேவிட் ரோஜரும் புதிய Chrome சுயவிவரங்கள் அம்சத்தை உருவாக்க தங்கள் குழு மேற்கொண்ட கூட்டுப்பணியை விவரிக்கின்றனர்.
“சில காலமாகவே என் குடும்பத்தினர் அனைவரும் ஒரு கம்ப்யூட்டரில் இருக்கும் Chrome உலாவியையே இணைந்து பயன்படுத்தி வருகிறோம்” என்கிறார் பாரிஸில் உள்ள Google நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவெலப்பராகப் பணிபுரியும் டேவிட் ரோஜர். “சில சமயம் ஒரே நேரத்தில் 50 இணையதளங்கள் வரை திறந்திருப்போம். உதாரணமாக, சமீபத்தில் நான் பார்த்த YouTube வீடியோவைத் தேடும்போது இதுவரை தேடியவற்றில் Minecraft வீடியோ கிளிப்புகளையும் பார்க்க முடிந்தது - இது கவலைக்குரிய விஷயம்." டேவிட்டுக்கு மட்டுமே இந்தச் சிக்கல் ஏற்படவில்லை. குடும்பத்தினர் அனைவரும் ஒரே கம்ப்யூட்டரையும் ஒரே Chrome உலாவியையும் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். குறிப்பாக, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் பெரும்பாலும் இவ்வாறே இருந்தது. பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்களுக்குத் தேவையானவற்றைப் படிக்கவும், ஆராயவும், பொழுதுபோக்கு அம்சங்களைப் பார்க்கவும் செய்தனர். பிரத்தியேக அமைப்புகள் மாறிவிட்டாலோ இதுவரை தேடியவை கலந்தாலோ குழப்பங்கள் ஏற்படலாம்.
“பெரும்பாலான யோசனைகளை எங்கள் தயாரிப்புகளோடு நெருங்கிய தொடர்புடைய மக்களிடமிருந்தே பெறுகிறோம்.”
டேவிட் ரோஜர், சாஃப்ட்வேர் டெவெலப்பர்.
டேவிட் ரோஜர் எதைப் பற்றிப் பேசுகிறார் என சபீன் போர்ஸேவுக்குத் தெளிவாகத் தெரியும். சபீன், மியூனிக்கில் உள்ள Googleளின் தனியுரிமை மற்றும் இணையப் பாதுகாப்புக்கான உலகளாவிய மேம்பாட்டு மையமான Google பாதுகாப்புப் பொறியியல் மையத்தின் (GSEC - Google Safety Engineering Center) தயாரிப்பு நிர்வாகி ஆவார். பல்வேறு வகையான சவால்களைத் தீர்ப்பதற்காகப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குழுக்கள் ஒன்றிணைந்து செயல்படும் விதமாக நடத்தப்படும் GSECக்கான தொழில்நுட்பச் சந்திப்புகள் ஒன்றில் இந்தப் பிரச்சனையை சபீன் முன்வைத்தார். அவ்வாறான ஒரு சந்திப்பில்தான் தனிப்பட்ட Chrome சுயவிவரங்கள் உருவாக்குவது பற்றிய முடிவெடுக்கப்பட்டது. இந்த அம்சம் தற்போது Chromeமில் உள்ளது. இதைக் கொண்டு ஒவ்வொரு பயனரும் தனக்கென ஒரு சுயவிவரத்தை உருவாக்கிக்கொள்ளலாம். ஒவ்வொரு முறை உலாவியைத் திறக்கும்போதும் தனக்குரிய சுயவிவரத்தைப் பயனர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் உதாரணமாக, பின்னணி வண்ணங்களை மாற்றலாம், புக்மார்க்குகளையும் கடவுச்சொற்களையும் தனித்தனியாக ஒருங்கிணைத்துச் சேமிக்கலாம்.
Chrome சுயவிவரங்களின் உருவாக்கம் முதல் இறுதிச் செயலாக்கம் வரை அதன் மேம்பாடு முழுவதும் அறிந்துகொள்வது சுவாரசியமான அனுபவமாகும். சபீன் போர்ஸே போன்ற தயாரிப்பு நிர்வாகிகள் Chrome உலாவி போன்ற குறிப்பிட்ட ஆப்ஸில் தினமும் வேலை செய்கின்றனர். “அடுத்த சில வருடங்களில் Chromeமை எப்படி மேம்படுத்த வேண்டுமென்பதில் கவனம் செலுத்துகிறோம். எத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகிறோம் என்றும் அவற்றை எப்படித் தீர்க்கப் போகிறோம் என்றும் யோசிக்கிறோம்,” என்கிறார் சபீன். “அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எங்கள் பணி அமைகிறது,” என்கிறார் டேவிட் ரோஜர். “Googleளில் தொடங்கப்படும் பெரும்பாலான திட்டப்பணிகள் இவ்வாறே தொடங்குகின்றன. இதற்கான யோசனைகளை எங்கள் தயாரிப்புகளோடு நெருங்கிய தொடர்புடைய மக்களிடமிருந்தே பெறுகிறோம்.”
Chrome சுயவிவரங்களில் பணியாற்ற சபீனுக்கு அனுமதி கிடைத்தவுடன், பல்வேறு துறைகளைச் சேர்ந்த (டேவிட் ரோஜரின் குழுவிலுள்ள பயனர் அனுபவ நிபுணர்கள் மற்றும் டெவெலப்பர்கள் உட்பட) பத்து பேரைத் தேர்ந்தெடுத்து அவர் ஒரு குழுவை அமைத்தார். Chromeமை மேம்படுத்துவதற்கான பணியில் டேவிட் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுள்ளார். அத்துடன், பல்வேறு திட்டப்பணிகளிலும் (பயனர் இடைமுக வடிவமைப்பு உட்பட) அவர் பணியாற்றியுள்ளார். அவர் குழு வடிவமைத்த Chrome சுயவிவரங்கள் அம்சத்தின் மாதிரியைப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர் குழு ஒன்று பரிசோதித்தது.
இதற்கிடையே, பணியிடத்திலோ மற்ற பயனர்களுடனோ தனிப்பட்ட விதத்தில் Chromeமைப் பயன்படுத்துபவர்களைக் கொண்ட ஒரு குழுவைக் கண்டறிவதற்காக, பயனர் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் நிபுணர்களுடன் சபீன் பணியாற்றினார். “இவர்களிடம் தங்கள் அனுபவங்கள் குறித்து நேர்காணல் செய்வதோடு Chrome சுயவிவரங்களை இரண்டு மாதங்களுக்கு அவர்கள் எப்படிப் பயன்படுத்தினர் என்பதைக் குறித்து வைத்துக்கொள்ளுமாறும் கூறினோம்.” ஆப்ஸில் தங்களுக்குப் புரியாத பகுதிகளை எதிர்கொண்டபோது என்ன செய்தனர் என்பதையும் சுயவிவரங்கள் குழு கேட்டறிந்தது.
“அடுத்த சில வருடங்களில் Chromeமை எப்படி மேம்படுத்த வேண்டுமென்பதில் கவனம் செலுத்துகிறோம்.”
சபீன் போர்ஸே, தயாரிப்பு நிர்வாகி
பாரிஸில், Chrome பீட்டா பயனர்களின் தரவை டேவிட் பகுப்பாய்வு செய்தார். மற்ற பயனர்களுக்கு முன்பாக Chrome பீட்டா பயனர்கள் புதிய அம்சங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். அப்போது தங்கள் உபயோகத் தரவை Googleளின் தயாரிப்பு மேம்பாட்டு நோக்கங்களுக்காகச் சமர்ப்பிப்பதற்கான ஒப்புதலை அவர்கள் வழங்கலாம். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான Chrome பீட்டா பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் Chrome சுயவிவரங்களை மேம்படுத்தும் பணியில் தொடர்ந்து உதவுகின்றன. உதாரணமாக, சிலருக்கு ஒரு குறிப்பிட்ட பட்டனைக் கிளிக் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம், ஒரு சிலருக்கு விளக்க உரை புரியாமல் இருந்திருக்கலாம். இந்த வகையான கருத்துகளின் அடிப்படையில் தயாரிப்பில் மாற்றங்கள் செய்து மேம்படுத்தலாம் என்றும், டிஜிட்டல் தயாரிப்புகளை மேம்படுத்தத் தொடர்ச்சியான இந்த வழிமுறைகள் அடிக்கடி செய்யப்படுகின்றன என்றும் டேவிட் விவரிக்கிறார். ஒரு முன்மாதிரிக்கான அணுகல் பயனர்களுக்கு வழங்கப்பட்டு அதிலுள்ள சிக்கல்கள் குறித்து கருத்துகள் பெறப்படுகின்றன. பிறகு டெவெலப்பர்கள் அந்தத் தயாரிப்பில் மாற்றங்களைச் செய்து அதை மறுபரிசோதனைக்கு அனுப்புவர்.
Chrome மெதுவாகத் தொடங்குவது போன்ற குறிப்பிட்ட சில சிக்கல்கள் பரிசோதனையின்போது தெரிவிக்கப்பட்டன. இது ஒரு ஹேக்கத்தானுக்குத் தனது டெவெலப்பர்களை ஒருங்கிணைக்க டேவிட்டைத் தூண்டியது. “Chrome உலாவியை மீண்டும் வேகப்படுத்துவதில் ஒரு வாரம் முழுவதும் அனைவரும் துடிப்புடன் செயல்பட்டோம்." அனைத்துச் சாத்தியங்களையும் எங்கள் குழு ஆராய்ந்தது. “இறுதியாக, இதற்குத் தேவைப்படும் பலவகையான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து மியூனிக்கில் உள்ள எங்கள் சக ஊழியர்களிடம் வழங்கினோம்” என்று டேவிட் தொடந்தார்.
திட்டப்பணியின் இந்தக் கட்டம் சபீனுக்கு சில இனிய நினைவுகளை வழங்கியுள்ளது! “இதுபோன்ற நேரங்களில் நாம் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் இயங்குவதுபோல் செயல்படுகிறோம். பலவற்றை முயல்கிறோம், தினமும் ஒவ்வொருவருடனும் கலந்து பேசுகிறோம், சிறந்த தீர்வை அடைவதை இலக்காக அமைக்கிறோம்.” பல்வேறு சுயவிவரங்களைப் பயன்படுத்தும் வசதி தற்போது Chromeமில் கிடைக்கிறது. ஆனால் இதற்கான பணி முழுமையாக நிறைவடைய சபீன் போர்ஸே மற்றும் டேவிட் ரோஜரின் குழுவுக்கு இன்னும் அதிக நாட்கள் தேவை. தனிப்பட்ட Chrome சுயவிவரங்களை மேம்படுத்த அதன் பயனர்களின் (டேவிட் குடும்பத்தினர் உட்பட) கருத்துகளையும் பரிந்துரைகளையும் அவர்கள் பெற்றுத் தொடர்ந்து செயலாற்றுகிறார்கள்.
படங்கள்: ஸ்டீப்ஃபனி ஃபஸ்ஸனிச் (4), ஃபுளோரியன் ஜெனராட்ஸ்கி (3).
இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்
உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
மேலும் அறிக