அனைத்துச் சேவைகளுக்குமான ஒரே கட்டுப்பாட்டு மையம்: Google கணக்கு

பயனர்கள் Googleளுடன் எந்தெந்தத் தரவைப் பகிர விரும்புகிறார்கள் என்பதையும் எவற்றைப் பகிர விரும்பவில்லை என்பதையும் அவர்களே தீர்மானிப்பதற்கு அனுமதிக்கும் கருவிகளை உருவாக்குவதில் ஸ்டீஃபன் மிக்லிட்ஸும் ஜான் ஹானமனும் சில ஆண்டுகள் செலவழித்தனர்.

ஸ்டீஃபன் மிக்லிட்ஸ் தான் Googleளில் பணிபுரிவதாகப் பிறரிடம் கூறும்போது, “உங்களுக்கு ஏன் இவ்வளவு தரவு தேவைப்படுகிறது?” என்ற கேள்வியே பெரும்பாலும் அவரிடம் கேட்கப்படும். அவரது பதில்: “தரவானது Google தயாரிப்புகளை உங்களுக்கு மிகப் பயனுள்ள வகையில் வழங்க உதவும் (உங்கள் தேடல் முடிவுகளைச் சரியான மொழியில் வழங்குவது, உங்கள் வீட்டிற்கான விரைவான வழியைப் பரிந்துரைப்பது போன்றவை). ஆனால் உங்கள் தரவை Google எப்படிச் சேமிக்க வேண்டும் என்பதையும் எங்கள் தயாரிப்புகளை உங்களுக்கேற்றவாறு பிரத்தியேகமாக வழங்க அந்தத் தரவை நாங்கள் பயன்படுத்தலாமா என்பதையும் நீங்களே தேர்வுசெய்துகொள்ளலாம் என்பதையே நான் எப்போதும் சுட்டிக்காட்டுவேன். நான் கூறுவதை நம்புவதற்கு முன்பு, பொதுவாக மக்கள் அவர்களாகவே இதைப் பயன்படுத்திப் பார்க்கவே விரும்புவார்கள்!”

"நாங்கள் சேவையைப் பிரத்தியேகமாக்கவும் தளவமைப்பை இன்னும் தெளிவானதாக்கவும் விரும்பினோம்."

ஜான் ஹானமன்

மிக்லிட்ஸ் 2007ம் ஆண்டு முதல் Googleளில் பணியாற்றி வருகிறார். மியூனிக்கில் உள்ள மையத்தில் முதன்முதலாகப் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில் இவரும் ஒருவர். விரைவிலேயே ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தரவுத் தனியுரிமை தொடர்பான பணிகளில் முன்னணி பொறுப்பு வகித்தார். 2010ம் ஆண்டு முதல் ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேம்படுத்துவதற்காக முக்கியமான பல Google தயாரிப்புகளின் உலகளாவிய வளர்ச்சிக்கு மிக்லிட்ஸ் வழிவகுத்துள்ளார். 2008ம் ஆண்டில் Google இந்தத் துறையின் தலைமையகத்தை ஜெர்மனியில் அமைத்ததை அவர் ஸ்மார்ட்டான முடிவாகக் கருதுகிறார். “தனியுரிமை குறித்து மிகத் தீவிரமாக விவாதிக்கப்படும் நாடுகளில் Google இருக்க விரும்பியது” என்பதை மிக்லிட்ஸ் நினைவுகூர்ந்தார்.

அதன் பிறகு, பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. மிகக் குறிப்பாக, மே 25, 2018ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (General Data Protection Regulation - GDPR) நடைமுறைக்கு வந்தது. தனிப்பட்ட தரவின் பயன்பாட்டையும் சேமிப்பகத்தையும் GDPR ஒழுங்கமைக்கிறது. 2016ம் ஆண்டில் அந்தச் சட்டத்தின் விதிமுறைகளை மிக்லிட்ஸும் அவரது சக ஊழியர்களும் முதன்முதலில் படித்த தருணத்தை அவர் நினைவுகூர்ந்தார். “நாங்கள் உருவாக்கிய பல கட்டுப்பாடுகளும் கருவிகளும் ஏற்கெனவே GDPRருடன் இணங்கியிருப்பதாகத் தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும் நாங்கள் சில பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது,” என்று நினைவுகூர்ந்தார். இப்போது அவர் என்னைக் கான்ஃபரன்ஸ் அறைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவரது சக ஊழியரான ஜான் ஹானமனைச் சந்திக்கிறார்.

Googleளில் உலகளாவிய தனியுரிமைக்கும் பாதுகாப்பிற்கும் பொறியியல் இயக்குநரான ஸ்டீஃபன் மிக்லிட்ஸ் (இடது பக்கம் உள்ளவர்) பொறுப்பாவார். இவர் டெக்னிக்கல் யூனிவர்சிட்டி ஆஃப் மியூனிக்கில் கணினி அறிவியல் பயின்றவர். மியூனிக்கிலிருக்கும் Google அலுவலகத்தில் 2007ம் ஆண்டின் கடைசியில் இருந்து பணியாற்றி வருகிறார்.

2009ம் ஆண்டில் Google அதன் முதல் தரவுத் தனியுரிமைக் கருவியான Google Dashboardஐ அறிமுகப்படுத்தியது. இது உருவானதற்கு மிக்லிட்ஸும் அவரது குழுவினரும் பொறுப்பாவார்கள். காலப்போக்கில், அதில் கூடுதல் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டன. 2013ம் ஆண்டு முதல், பயனர்கள் தங்கள் Google டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் செயல்பாட்டிற்கான திட்டத்தை Inactive Account Manager அம்சத்தின் மூலம் நிர்வகிக்க முடிந்தது. 2014ம் ஆண்டில் பாதுகாப்புச் சரிபார்ப்பு சேர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2015ம் ஆண்டில் தனியுரிமைச் சரிபார்ப்பு சேர்க்கப்பட்டது. இந்தப் புதிய கருவிகள் பயனர்களது தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் அவர்களுக்குப் படிப்படியாக வழிகாட்டும்.

2015ம் ஆண்டில் அனைத்து Google சேவைகளும் ஒன்றிணைக்கப்பட்டு 'எனது கணக்கு' என்று அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்முறையாக, அனைத்துச் சேவைகளுக்குமான ஒரே கட்டுப்பாட்டு மையத்தைப் பயனர்கள் பயன்படுத்தினர். இந்தக் கட்டுப்பாட்டு மையம் பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தரவில் எவற்றையெல்லாம் Google சேமித்தது என்பதைப் பார்க்கவும், எந்தெந்தத் தகவல்களை அவர்கள் நீக்க விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கும், ஆன்லைன் செயல்பாட்டைக் கண்காணிக்கும் மற்றும் தரவைச் சேமிக்கும் செயல்பாடுகளை முடக்குவதற்கும் அனுமதித்தது. பயனர்களால் பிரத்தியேக விளம்பரங்களுக்கான ஒப்புதலையும் நீக்க முடிந்தது. 'எனது கணக்கு' அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் தொடர்ந்து அது விரிவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது.

“Google எந்தெந்தத் தகவல்களைச் சேமித்து வைக்க அனுமதிக்கலாம் என்பதை ஒவ்வொரு பயனரும் தேர்வுசெய்வது எங்களுக்கு முக்கியம்.”

ஸ்டீஃபன் மிக்லிட்ஸ்

ஜூன் 2018ம் ஆண்டில், 'எனது கணக்கு' சேவை மறுவடிவமைக்கப்பட்டு Google கணக்கு என்று மாற்றப்பட்டது. இந்த மறுவெளியீட்டிற்கு ஸ்டீஃபன் மிக்லிட்ஸும் தயாரிப்பு நிர்வாகியான ஜான் ஹானமனும் பொறுப்பாவார்கள். ஹானமன் கணினி அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 2013ம் ஆண்டு முதல், Googleளின் மியூனிக் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். 'எனது கணக்கை' மேம்படுத்த அவர் உதவினார். இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தப்படும் 'Google கணக்கிற்கும்' அவர் பொறுப்பாவார். அவரது சக ஊழியர்கள் “மிஸ்டர். Google கணக்கு” என்ற புனைப்பெயரையும் அவருக்கு வழங்கியிருந்தனர்.

ஹானமன் தனது ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தி Google கணக்கின் புதிய வடிவமைப்பை விளக்குகிறார். “நாங்கள் சேவையைப் பிரத்தியேகமாக்கவும் தளவமைப்பை இன்னும் தெளிவானதாக்கவும் விரும்பினோம். குறிப்பாக, சிறிய திரைகளுடன் கூடிய மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு வடிவமைத்தோம்.” ஸ்டீஃபன் மிக்லிட்ஸ் தன்னுடைய ஸ்மார்ட்ஃபோனை எடுத்து ஆப்ஸைத் திறக்கிறார். “நான் இந்தச் சேவையை இயக்கும்போது, பாதுகாப்புச் சரிபார்ப்பை மேற்கொள்வதற்கான விருப்பத்தை மென்பொருள் வழங்கும். உதாரணமாக, எனது Google கணக்கின் பாதுகாப்பை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து Google ஏதேனும் பரிந்துரைகளைக் காட்டுகிறதா என்று உடனடியாக இங்கே என்னால் பார்க்க முடியும்” என்று அவர் விளக்குகிறார்.

ஜான் ஹானெமன் (இடது பக்கம் உள்ளவர்) 'எனது கணக்கு' என்று முன்பு அறியப்பட்ட 'Google கணக்கு' அம்சத்தின் தயாரிப்பு நிர்வாகியாவார். இந்தச் சேவை பயனர்களின் அனைத்திற்குமான ஒரே கட்டுப்பாட்டு மையமாகும். அவர்களின் பாதுகாப்பையும் தரவுத் தனியுரிமையையும் சரிபார்க்க இது அனுமதிக்கிறது.

உலகம் முழுவதுமுள்ள மக்கள் ஒவ்வொரு சேவையையும் எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் அவர்களது பொதுவான அணுகுமுறைகள் எவை என்பதையும் அறிய, மிக்லிட்ஸும் ஹானமனும் தங்களது தயாரிப்பு மேம்பாட்டுப் பணியின் பெரும்பகுதியை Google கருத்துக்கணிப்புகளை மேற்கொள்வதில் செலவழித்தனர். “தனிப்பட்ட தரவின் பயன்பாட்டைப் பொறுத்தவரை, அமெரிக்கர்களைக் காட்டிலும் ஐரோப்பியர்கள் (குறிப்பாக ஜெர்மானியர்கள்) மிகவும் சந்தேக மனப்பான்மையுடன் இருக்கின்றனர்” என்று ஹானமன் கூறுகிறார். “நிச்சயமாக, அது நம் வரலாற்றுடன் தொடர்புடைய விஷயம்”. பெரும்பாலான பயனர்கள் தங்கள் தரவு சேமிக்கப்படுவதை எதிர்ப்பதில்லை. “சில பயனர்கள் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய நேரத்தைத் தங்கள் ஸ்மார்ட்ஃபோன் நினைவூட்டும்போது நடைமுறையில் அதை மிக இயல்பாகவே எடுத்துக்கொள்கின்றனர்” என்று ஹானமன் கூறுகிறார். “இன்னும் சிலரோ 'தன்னிரப்பி' அம்சத்தை வரவேற்கின்றனர். இந்த அம்சத்தின் மூலம் தேடல் வார்த்தையின் மீதமுள்ள பகுதியைத் தேடல் பொறியால் கணிக்க முடியும். எங்கள் தயாரிப்புகளை மக்களுக்கேற்றவாறு பிரத்தியேகமாக வழங்குவதற்கு அவர்களது தரவைப் பயன்படுத்த எங்களை அனுமதித்தால் மட்டுமே இந்த அம்சங்களையும் மேலும் பலவற்றையும் அவர்கள் அணுக முடியும்”.

தனியுரிமையைப் பொறுத்தவரை அதற்கென ஒரேயொரு தீர்வோ ஒரேவிதமான தீர்வோ இருக்க முடியாது என ஸ்டீஃபன் மிக்லிட்ஸ் குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் தனிநபராக இருப்பதும் காலப்போக்கில் பயனர்களின் தேவைகள் மாறுவதும் அதற்கான சில காரணங்களாகும். “எந்தெந்தத் தகவல்களைச் சேமித்து வைக்க Googleளை அனுமதிக்கலாம் என்பதை ஒவ்வொரு பயனரும் தேர்வுசெய்வது எங்களுக்கு முக்கியமானதாகும். அதைச் சாத்தியமாக்க, எங்கள் கருவிகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துகிறோம்.”

புகைப்படங்கள்: கோனி மிர்பாக்

இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்

உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

மேலும் அறிக