NCMEC, Google மற்றும் இமேஜ் ஹேஷிங் தொழில்நுட்பம்


அமெரிக்காவில் உள்ள நேஷ்னல் சென்டர் ஃபார் மிஸ்ஸிங் அண்ட் எக்ஸ்ப்லாய்ட்டட் சில்ரன் (NCMEC) அமைப்பானது, சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கம் (CSAM - Child Sexual Abuse Material) தொடர்பாக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஆன்லைன் புகார்களைப் பெறுகிறது. NCMEC அமைப்பின் மூத்த துணைத் தலைவரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான மிச்செல் டிலோன், தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்தும், சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கம் தொடர்பான சிக்கல்களைத் தடுப்பதில் அவை எப்படி முன்னேறி வருகின்றன என்பது குறித்தும், Googleளின் Hash Matching API குறித்தும் பேசுகிறார்.

NCMEC குறித்தும் அதில் உங்களின் பங்கு என்ன என்பது குறித்தும் கூற முடியுமா?


நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக NCMECயில் இருக்கிறேன். இந்த அமைப்பின் வளர்ச்சியையும் சிறுவர்களுக்கும் அவர்களின் பாதுகாப்பிற்கும் நேரும் அச்சுறுத்தல்களையும் சவால்களையும் நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ஒரு சைபர் டிப்லைன் பகுப்பாய்வாளராக எனது வாழ்க்கையை இங்குதான் தொடங்கினேன்.

1998ம் ஆண்டில் சைபர் டிப்லைன் உருவாக்கப்பட்டது. சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்கான ஒரு வழியாக இது தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில், வயதுவந்த பெரியவர் யாரவது ஆன்லைனில் தங்களின் பிள்ளையுடன் தகாத முறையில் பேசுவதாகப் பெற்றோரிடமிருந்து பெறப்படும் புகார்கள், சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கம் உள்ள இணையதளங்கள் குறித்த புகார்கள் போன்றவை மட்டுமே இதன் மூலம் பெறப்பட்டன. அதன் பிறகு, அமெரிக்காவில் ஒரு தேசியச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவற்றின் சிஸ்டங்களில் எதிர்கொள்ளும் சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு வெளிப்படையான நிகழ்வையும் சைபர் டிப்லைனுக்குத் தெரிவித்தாக வேண்டும்.

ஆரம்ப நாட்களில், சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து ஒரு வாரத்தில் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 100ஐ விடச் சற்று அதிகமாக மட்டுமே இருந்தது. 2001ம் ஆண்டில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திடமிருந்து முதல் புகாரைப் பெற்றோம். 2021ம் ஆண்டு முதல் தினமும் சுமார் 70,000 புதிய புகார்களைப் பெற்று வருகிறோம். இவற்றில் சில புகார்கள் மட்டும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படுகின்றன. பெரும்பாலான புகார்கள் தொழில்நுட்ப நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கத்திற்கு எதிராகப் போராட ஆன்லைன் நிறுவனங்களுக்கு NCMEC அமைப்பு எப்படி உதவுகிறது?


இதைத் தடுப்பதற்கு நிறுவனங்கள் சட்டப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் எடுக்க வேண்டியதில்லை. பொதுவாக, சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கத்தைக் கண்டறிந்தாலோ அவற்றைப் பற்றித் தெரியவந்தாலோ அதுகுறித்து அவர்கள் புகாரளிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக சைபர் டிப்லைனில் பாலியல் கொடுமை குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதற்கு இதுவே காரணமாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் புகார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கத்தை முன்னெச்சரிக்கையுடன் கண்டறிந்து அவற்றை அகற்றுவதுடன், அதுகுறித்துப் புகாரளிப்பதும் இந்த அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம்.

NCMECயில் நாங்கள் செயல்படுத்தும் முதன்மையான திட்டங்களில் ஹேஷ் பகிர்வுப் பிளாட்ஃபார்ம்களும் ஒன்று. இவற்றில் NGOக்களும் தொழில்துறை நிறுவனங்களும் பங்களிக்கலாம். ஆர்வமுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கத்தை எதிர்த்துப் போராடும் பொருட்டு 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட, மூன்று முறை சரிபார்க்கப்பட்ட சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கத்தின் ஹேஷ் மதிப்புகளை NGO ஹேஷ் பகிர்வுப் பிளாட்ஃபார்ம் மூலம் NCMEC வழங்குகிறது. Google உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்கள் இந்தப் பட்டியலைப் பயன்படுத்தி அவற்றின் பிளாட்ஃபார்ம்களில் இருந்து சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கத்தை அகற்றுவதற்குத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குழந்தைகளுக்குச் சேவையளிக்கும் பிற நம்பகமான NGOக்கள், NCMEC அமைப்பின் ஹேஷ் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தி அவர்களின் ஹேஷ்களைத் தொழில்துறை நிறுவனங்களுக்கு வழங்க முடிவதால், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொரு NGOவிற்கும் சென்று விவரங்களைத் தனித்தனியாகப் பெற வேண்டிய தேவையையும் இந்தப் பட்டியல் குறைத்துள்ளது.

தொழில்துறை நிறுவனங்களுக்கு ஹேஷ் பகிர்வுப் பிளாட்ஃபார்மையும் நாங்கள் வழங்குகிறோம். இது சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கம் தொடர்பான அவர்களின் சொந்த ஹேஷ்களை ஒருவருக்கொருவர் பகிரக்கூடிய நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. இந்த மாதிரியான உள்ளடக்கத்தை முன்கூட்டியே கண்டறிய ஆர்வமாக உள்ள எந்தவொரு நிறுவனமும் அதற்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும் வைத்திருப்பதையும் சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கம் (CSAM) தொடர்பான அவர்களின் சொந்த ஹேஷ்களை நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம். பட்டியலில் உள்ள ஹேஷ்களின் மொத்த எண்ணிக்கையில் தோராயமாக 74 சதவீதப் பங்களிப்பை Google இந்தப் பிளாட்ஃபார்மிற்கு வழங்குகிறது.

தற்போது நாங்கள் பெறும் புகார்களின் எண்ணிக்கையைக் கொண்டு, ஒரே மாதிரியான படங்கள் பலமுறை புகாரளிக்கப்பட்டிருப்பதை உங்களால் கற்பனை செய்ய முடியும். தெரிந்த உள்ளடக்கத்தைக் கண்டறிய நிறுவனங்கள் ஹேஷ் மதிப்புகளைப் பயன்படுத்துவதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தெரிந்த உள்ளடக்கத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஆன்லைனில் பகிரப்படும் புதிய உள்ளடக்கத்தை அடையாளத்தை காண்பது NCMECக்கு மிகவும் முக்கியமானதாகும்.

சைபர் டிப்லைன் புகார்களுக்கு முன்னுரிமை அளிக்க நேஷ்னல் சென்டர் ஃபார் மிஸ்ஸிங் அண்ட் எக்ஸ்ப்லாய்ட்டட் சில்ரன் (NCMEC) அமைப்பிற்கு Googleளின் Hash Matching API உதவியுள்ளது. இந்தத் திட்டம் எப்படித் தொடங்கியது என்பது குறித்து மேலும் கூற முடியுமா?


ஹேஷ் பகிர்வுத் திட்டத்தின் வெற்றியால் முற்றிலும் புதிய சவாலை நாங்கள் எதிர்கொண்டோம். அதாவது அதன் எண்ணிக்கை நிறைய சவால்களை உருவாக்கிவிட்டது. NCMEC போன்ற ஒரு லாப நோக்கமற்ற அமைப்புக்கு இந்த எண்ணிக்கையை அளவிடுவதற்கான கணக்கீட்டுத் திறன் இல்லை. இதற்கான தீர்வைப் பெறுவதில் நாங்கள் ஆர்வமாக இருந்தோம். Hash Matching API கருவியை உருவாக்க உதவியதற்காக Googleளுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

2020ம் ஆண்டில் 21 மில்லியன் சைபர் டிப்லைன் புகார்களைப் பெற்றோம். ஆனால் பெரும்பாலான புகார்களில் பல படங்களும் வீடியோக்களும் இருந்தன. அந்த 21 மில்லியன் புகார்களில், சிறார் பாலியல் கொடுமை சார்ந்த படங்களும் வீடியோக்களும் சுமார் 70 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்தன. அதில் நிறைய புகார்கள் பலமுறை வந்திருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. சரியான பொருத்தங்களைக் கண்டறிவது NCMEC அமைப்புக்கு எளிதானதுதான் என்றாலும், அளவிற்கு அதிகமாக எண்ணிக்கையில் உள்ள இந்தப் படங்களில் ஒரே மாதிரியானவற்றைக் கண்டறிந்து, இதுவரை பார்க்காத படங்களை முன்னுரிமைப்படுத்துவது என்பது முடியாத காரியமாகிவிட்டது. ஆனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிவரும் சிறுவர்களை அடையாளம் காண்பதற்கு இதைக் கட்டாயம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது.

Hash Matching API மூலம் NCMEC என்ன பலனடைந்துள்ளது?


இந்த முக்கியமான தகவல்களை எடுத்து, சட்ட அமலாக்கத்திற்கு முடிந்தவரை விரைவாக அனுப்பும் முக்கியமான பணியை நாங்கள் செய்கிறோம். சைபர் டிப்லைன் புகார்களுக்கு Hash Matching API மதிப்பைச் சேர்ப்பதற்கான புதிய வழியை இந்தக் கருவி வழங்குவது இதன் பயன்களில் ஒன்றாகும்.

சிறார் பாலியல் கொடுமை சார்ந்த ஒவ்வொரு படத்தையும் வீடியோவையும் லேபிளிடும் நிரல் எங்களிடம் உள்ளது. லேபிள்களுக்கான உதாரணங்களாக, 'இது CSAM', 'இது CSAM அல்ல', 'சிறுவர்/நபரின் வயதைக் கண்டறிவது கடினம்' போன்றவற்றைக் குறிப்பிடலாம். கடந்த வருடத்தில் மட்டும் 70 மில்லியன் ஃபைல்கள் பெறப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் எங்களால் லேபிளிட முடியாது. ஆனால் அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இந்த API உதவுகிறது. ஒரு ஃபைலைக் குறியிடும்போது, பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உள்ள அனைத்து ஃபைல்களையும் அடையாளம் காண்பதற்கு API உதவுகிறது. அதன் பிறகு அவற்றை நாங்கள் நிகழ்நேரத்தில் குறிச்சொல்லிடுகிறோம். இதன் விளைவாக எங்களால் 26 மில்லியனுக்கும் அதிகமான படங்களைக் குறிச்சொல்லிட முடிந்தது.

சட்ட அமலாக்கத்திற்கு நாங்கள் அனுப்பும் அறிக்கைகளுக்குக் கூடுதல் மதிப்பைச் சேர்ப்பதற்கு இது உதவும். இதன் மூலம் முதலில் எந்தெந்தப் புகார்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிந்து அவற்றுக்கு முன்னுரிமை அளிக்க முடியும். இதுவரை பார்க்காத படங்களை அடையாளம் காணவும் இது எங்களுக்கு உதவுகிறது. உலகில் எங்கேனும் உள்ள ஒரு சிறுவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் காட்சிகளே பெரும்பாலும் அந்தப் படங்களில் உள்ளன. 'வைக்கோல் போரில் ஊசியைத் தேடுகிறோம்' என்னும் பழமொழியை எடுத்துக்கொண்டால், அதில் வரும் ஊசி என்பது மீட்கப்பட வேண்டிய சிறுவரைக் குறிக்கிறது. உடனடி உதவிகள் தேவைப்படும் சிறுவர்களின் படங்களில் அதிகக் கவனம் செலுத்தி, அவற்றை நீக்குவதற்கு Googleளின் கருவி எங்களுக்கு உதவுகிறது.

சைபர் டிப்லைன் புகார்களைச் செயலாக்கி, சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்யும் NCMEC மதிப்பாய்வாளர்களின் நல்வாழ்வில் இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது?


சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கத்தைக் கண்டறியும் இந்தத் தொழில்நுட்பமானது ஒரே மாதிரியான படங்களை எங்கள் பணியாளர்கள் அடிக்கடி மதிப்பாய்வு செய்ய வேண்டிய தேவையைக் குறைக்கிறது. பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சிறுவர்களின் படங்களில் உள்ளவர்கள் இப்போது வளர்ந்து பெரியவர்களாக இருக்கலாம். இந்தப் படங்கள் ஆன்லைனில் நிரந்தரமாக இருப்பது அந்தத் தனிப்பட்ட நபர்களைத் தொடர்ந்து பாதிக்கும். எனவே அதுபோன்ற படங்களைக் குறியிடுவது சமீபத்தில் பாலியல் கொடுமைகளை எதிர்கொண்ட குழந்தைகளின் மீது கவனம் செலுத்த உதவுவதோடு, சட்டவிரோதமான படங்களைப் பிறருக்குக் காட்டாமல் அகற்றவும் உதவும்.

பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைகளுக்கு உதவுவதற்காகவே எங்கள் பணியாளர்கள் செயலாற்றி வருகின்றனர். தீங்கு விளைவிப்பதாக அறியப்படும் ஒரே மாதிரியான உள்ளடக்கத்தை அடிக்கடி பார்க்க வேண்டிய தேவையின்றி, எங்கள் பணியாளர்கள் தங்களின் நல்வாழ்வைப் பேணுவதற்கான வழிமுறையில் இந்தப் பொதுப்பணி ஓர் அற்புதமான முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது.

ஆன்லைனில் இந்த வகையான உள்ளடக்கத்தை எதிர்த்துப் போராடும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்தப் பணி ஒட்டுமொத்தமாக எப்படி உதவுகிறது?


சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை ஆதரிக்க, அதைக் கண்டறிவதற்கான தொழில்நுட்பத்தை நிறுவனங்களுக்கு Google வழங்குகிறது என்பதையும் NCMECயின் செயல்பாடுகளையும் தாண்டி பலவற்றில் Hash Matching API நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நாங்கள் அறிவோம். NCMECயின் மேம்படுத்தப்பட்ட மற்றும் திறம்பட்ட செயல்முறையின் பலனை அனைத்துத் தொழில்நுட்ப நிறுவனங்களும் பெறுகின்றன. எங்களிடம் இந்தக் கருவி இல்லாத பட்சத்தில் எவ்வளவு முக்கியத்துவத்துடன் கையாளுவோமோ, அதைவிட அதிக முக்கியத்துவத்துடன் சைபர் டிப்லைனில் பெறும் புகார்கள் சரிபார்க்கப்பட்டு உரிய நேரத்தில் கையாளப்படுகின்றன.

தொழில்நுட்ப நிறுவனங்கள், சட்ட அமலாக்கம், பாலியல் கொடுமையிலிருந்து தப்பிய சிறார்கள், அவர்களின் குடும்பங்கள் ஆகியவற்றுக்கான முக்கிய மையமாக NCMEC விளங்குகிறது. சிக்கல்களையும் தீர்வுகளையும் தனித்துவமான கண்ணோட்டத்தில் நாங்கள் பார்க்கிறோம். சைபர் டிப்லைன் உதவியுடன், ஆன்லைனில் ஏற்கெனவே உள்ள மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கம் குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்தப் புகார்கள் அனைத்தும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்குக் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. உண்மையில், பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட மற்றும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட குழந்தைகள் மீதான கவனத்தை நாம் ஒருபோதும் இழக்கக்கூடாது.

பாலியல் கொடுமை செய்யப்பட்ட சிறார்களில் 20,000க்கும் மேற்பட்டவர்களின் தவறான பயன்பாடு ஒரு வீடியோவாகவோ படமாகவோ பதிவுசெய்யப்பட்டுள்ளதை நாங்கள் அறிகிறோம். பாலியல் கொடுமையிலிருந்து தப்பிய இவர்களில் சிலர் இன்னும் சிறார்களாக உள்ளனர், சிலர் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டனர். அவர்கள் இன்னும் தொடர்ந்து அவமானங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, இந்தப் படங்களின் புழக்கத்தைக் குறைப்பதற்கு நம்மால் முடிந்தவற்றைச் செய்வது மிகவும் முக்கியமாகும்.

"பழைய படங்கள்" என்றோ "மீண்டும் காட்டப்படும் படங்கள்" என்றோ கருதி ஏற்கெனெவே அறியப்பட்ட சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கத்தை நிராகரிப்பது பயனர்களிடம் உள்ள ஒரு பொதுவான மனப்பான்மையாக உள்ளது. இவர்கள் உண்மையாகப் பாதிக்கப்பட்ட சிறார்கள் என்பதையும் 20,000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பழைய வாழ்க்கையில் இருந்து விடுபட்டு புதிய வாழ்க்கையை வாழ விரும்புகின்றனர் என்பதையும் நினைவூட்டி நாங்கள் அடிக்கடி குரல் கொடுக்கிறோம். தங்கள் வாழ்வின் மோசமான தருணங்களைச் சித்தரிக்கும் படங்களை Google போன்ற நிறுவனங்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதை அறிந்து அவர்கள் மிகுந்த ஆறுதலடைகின்றனர்.

சிறார் பாலியல் கொடுமை சார்ந்த படங்களோ உள்ளடக்கமோ ஆன்லைனில் இருந்தால் அதை நேஷ்னல் சென்டர் ஃபார் மிஸ்ஸிங் அண்ட் எக்ஸ்ப்லாய்ட்டட் சில்ரன் (NCMEC) அமைப்பிலோ உலகம் முழுவதுமுள்ள ஆணையங்களில் ஏதேனும் ஒன்றிலோ புகாரளிக்கலாம். 

ஆன்லைனில் சிறார் பாலியல் வன்கொடுமை சார்ந்த உள்ளடக்கத்திற்கு எதிராகப் போராடவும் அதனைப் பரப்ப எங்கள் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் Google உறுதிகொண்டுள்ளது. ஆன்லைனில் சிறுவர்களைப் பாதுகாப்பது குறித்த எங்களின் இணையதளத்தில் இது குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம்.

இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்

உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

மேலும் அறிக