உங்களை COVID‑19 ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாக்கும் வழிகள்

ஆன்லைனில் உங்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான் எந்த ஒரு ஆபத்தும் உங்களை நெருங்கும் முன்பாகவே அதனைக் கண்டறிந்து தடுப்பதற்கான சக்திவாய்ந்த பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுடன் எங்கள் தயாரிப்புகளை உருவாக்குகிறோம்.

சமீபகாலமாக COVID‑19 தொடர்பான ஆன்லைன் மோசடிகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. அத்தகைய மோசடிகளைக் கண்டறியவும் தவிர்க்கவும் நாங்கள் வழங்கும் இந்த யோசனைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் ஆன்லைனில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

பொதுவான COVID‑19 மோசடிகள்

தனிப்பட்ட தகவல்களைத் திருடுதல்

மோசடியாளர்கள் உங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்துவதாகவோ நோய்த்தொற்று உள்ள ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதாகவோ போலியாகப் பேசி உங்கள் முகவரி, பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் ஆகியவற்றையும் சில நேரங்களில் பின் நம்பரையும்கூடக் கேட்கலாம்.

பொருட்களிலும் சேவைகளிலும் வழங்கப்படும் போலி சலுகைகள்

அடையாளம் தெரியாத மூன்றாம் தரப்பினர் நம்ப முடியாத தள்ளுபடி விலைகளில் மாஸ்க்குகளை விற்பதாகவோ ஆன்லைன் பொழுதுபோக்கு சேவை சந்தாக்களை வழங்குவதாகவோ தொடர்புகொள்ளலாம்.

அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம்

COVID‑19 குறித்த தகவல்களைத் தரக்கூடிய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (MoHFW), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) போன்ற அரசுத் துறைகளின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்யலாம்.

மோசடியான மருத்துவ சலுகைகள்

இல்லவே இல்லாத சிகிச்சைகள், பரிசோதனைக் கருவிகள், கிருமிநாசினி அல்லது மாஸ்க்குகளை சலுகை விலையில் விற்று ஏமாற்றலாம்.

போலியான தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை கோருதல்

COVID‑19 பாதிப்புக்கான நிவாரணம் கோரும் லாப நோக்கமற்ற நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கும் முன் அவற்றைப் பற்றி முறையாக விசாரித்துப் பார்க்க வேண்டும்.

COVID‑19 மோசடிகளைத் தவிர்ப்பதற்கான யோசனைகள்

மோசடியாளர்கள் உங்களை நெருங்கக்கூடிய வழிகளை அறிந்திடுங்கள்

COVID‑19 காரணமாக தகவல் தொடர்புகள் அதிகரித்திருப்பதை மோசடியாளர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வைரஸ் பற்றிய முறையான தகவல் அளிப்பதைப் போலவே மோசடிகளை நடத்துகின்றனர். மின்னஞ்சல்கள் மட்டுமல்லாமல் மெசேஜ், தானியங்கி அழைப்புகள் அல்லது சந்தேகத்துக்குரிய வலைதளங்கள் ஆகியவற்றின் மூலமும் மோசடியாளர்கள் உங்களை அணுகலாம்.

நம்பகமான தளங்களில் இருந்து நேரடியாகத் தகவல் பெறுங்கள்

மோசடியாளர்கள் பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட, நம்பகமான, அங்கீகரிக்கப்பட்ட நபர்களைப் போலவே தோற்றமளிப்பார்கள். எனவே, COVID‑19 பற்றிய சமீபத்திய உண்மைத் தகவல்களை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (MoHFW) போன்ற தளங்களில் இருந்தே நேரடியாகப் பெறுங்கள்.

தனிப்பட்ட தகவல்களையோ நிதித் தகவல்களையோ யாரேனும் கேட்டால் பகிர்வதற்கு முன் எச்சரிக்கையுடன் தீர விசாரியுங்கள்

சந்தேகத்திற்கிடமாக யாரேனும் உங்கள் தகவல்களைக் கோரினால், கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு அதை ஆராயுங்கள். மோசடியாளர்கள் பெரும்பாலும் உள்நுழைவுத் தகவல், பேங்க் விவரங்கள், முகவரிகள் ஆகியவற்றைப் போன்ற தேவைக்கு அதிகமான தகவல்களைக் கேட்பார்கள். மேலும் அவர்கள் பேங்க் டிரான்ஸ்ஃபர் அல்லது விர்ச்சுவல் கரன்சி மூலமாக பணம் அனுப்பப் சொல்லலாம்.

லாப நோக்கமற்ற நிறுவனங்கள் மூலமாக நேரடியாக நன்கொடை கொடுங்கள்

சில மோசடிகள் உதவி மனப்பான்மையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, COVID‑19 நிவாரணத்துக்காகவோ வேறு லாப நோக்கமற்ற நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்தோ நன்கொடை கேட்கின்றன. உங்கள் பணம் ஒரு லாப நோக்கமற்ற நிறுவனத்துக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்த, உங்களுக்கு அனுப்பப்பட்ட ஏதோ ஓர் இணைப்பைக் கிளிக் செய்வதற்குப் பதிலாக, அந்நிறுவனத்தின் இணையதளத்திற்கே சென்று நேரடியாக நன்கொடை அளிக்கலாம்.

கிளிக் செய்வதற்கு முன்பாக இணைப்புகளையும் மின்னஞ்சல் முகவரியையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபாருங்கள்

போலி இணைப்புகள் பெரும்பாலும் உண்மையான இணையதளங்களைப் போலவே தோன்றினாலும், அவற்றில் கூடுதல் வார்த்தைகளோ எழுத்துக்களோ சேர்க்கப்பட்டிருக்கும். "இங்கு கிளிக் செய்க" என்பது போல் ஏதேனும் இருந்தால், அதன் URLலின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க அதன் மீது கர்சரைக் கொண்டு செல்லுங்கள் அல்லது அந்த உரையின் மேல் நீண்ட நேரம் கிளிக் செய்தவாறே பிடித்திருங்கள். அதனைக் கிளிக் செய்து விடாமல் கவனமாக இருங்கள். URL அல்லது மின்னஞ்சல் முகவரியில் எழுத்துப்பிழை அல்லது அர்த்தமற்ற எழுத்துகள், எண்கள் ஆகியவை இருப்பதும் மோசடியை உணர்த்தலாம்.

ஏற்கெனவே யாராவது புகார் அளித்திருக்கிறார்களா என்று தேடுங்கள்

உங்களுக்கு ஒருவர் மோசடி மெசேஜ் அனுப்பியிருந்தால் உங்களைப் போலவே பலருக்கும் அதை அனுப்பி இருக்கலாம். எனவே அதில் உள்ள மின்னஞ்சல் முகவரி, ஃபோன் நம்பர் அல்லது மிகவும் சந்தேகத்திற்குரிய பகுதிகளை நகலெடுத்து ஒரு தேடல் வலைதளத்தில் உள்ளிட்டு ஏற்கெனவே யாராவது அதைப் பற்றிப் புகார் அளித்திருக்கிறார்களா என்று பாருங்கள்.

உங்கள் கணக்கில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்த்திடுங்கள்

ஆன்லைனில் கூடுதல் பாதுகாப்பிற்காக, உங்கள் கணக்கில் இரு-படி அங்கீகாரத்தை இயக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் கணக்கை அணுகுவதற்கு இரண்டு சரிபார்ப்புப் படிகளைக் கட்டாயமாக்கி பாதுகாப்பை அதிகரிக்கிறது. உதாரணமாக, உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றும் (உங்கள் பாஸ்வேர்டு) நீங்கள் கைவசம் வைத்திருக்கும் ஒரு சாதனமும் (உங்கள் ஃபோன் அல்லது செக்யூரிட்டி கீ) உள்நுழைவுக்குத் தேவைப்படலாம்.

புகார் அளிக்கவும்

சந்தேகத்துக்கிடமாக எதையாவது பார்த்தால் g.co/ReportPhishing அல்லது g.co/ReportMalware இணைப்பில் புகார் அளிக்கவும்

COVID‑19 ஆன்லைன் மோசடிகளில் இருந்து பிறரைப் பாதுகாக்க உதவுங்கள்

இந்த ஆலோசனைகளைப் பிறருடன் பகிர்ந்து ஆன்லைனில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க உதவுங்கள். இவற்றை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்வதோடு கீழிருக்கும் ஒருபக்கச் சுருக்கத்தைப் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்

PDF வடிவில் பதிவிறக்கு