நீங்கள் உருவாக்கியவற்றைப் பயனர்கள் பயன்படுத்திப் பார்க்கச் செய்து அவர்களின் அனுபவத்தைப் புரிந்துகொள்ளுதல்.
தயாரிப்புகளைப் பயனர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதைப் பயனர் அனுபவங்களின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்கிறார்கள். ஆர்ன தெ போயி, பயனர் அனுபவத்திலும் ஆன்லைன் தனியுரிமையிலும் நிபுணத்துவம் பெற்றவர். தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கான பொறியியல் துறையின் இயக்குநராக ஸ்டீஃபன் மிக்லிட்ஸ் உள்ளார். தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கருவிகளை உருவாக்குவது இவரின் முக்கியப் பணியாகும்.
ஆர்ன தெ போயி, Googleளில் பயனர் அனுபவ ஆராய்ச்சியாளராக உள்ள நீங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கருவிகளைப் பயனர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்கிறீர்கள். அதில் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
ஆர்ன தெ போயி, Google பயனர் அனுபவ ஆராய்ச்சி நிர்வாகி: ஆன்லைனில் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்க வேண்டும் என்பதே பயனர்களின் அடிப்படையான எதிர்பார்ப்பு. அவர்கள் தங்களின் தரவு தனிப்பட்டதாகப் பராமரிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். கடந்த சில வருடங்களாகவே இணையத்தின் வளர்ச்சியும் சிக்கல்தன்மையும் அதிகரித்து வருவதால் பயனர்கள் தங்களின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது எனவும் தங்களின் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறதா எனவும் கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளனர். இன்றைய நாட்களில் நாம் இணையத்தைப் பயன்படுத்தும் அளவையும் இணையத்தில் தரவு கசிவது குறித்த செய்திகளையும் இன்னும் பலவற்றையும் கருதும்போது இதுபோன்ற கேள்விகள் நியாயமானவையே.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஆன்லைனில் பயனர்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன?
தெ போயி: உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு நாடுகளில் கடந்த சில வருடங்களாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில், மக்கள் அனைவருக்கும் தனியுரிமை என்பது முக்கியமான ஒன்று என்பதை அறிந்தோம். தனியுரிமைத் தகவல்களைப் படிப்பதிலோ தனியுரிமை அமைப்புகளை மாற்றுவதிலோ பயனர்கள் அதிக நேரம் செலவிட விரும்புவதில்லை என்பதே யதார்த்தமான உண்மை. பரிச்சயமற்ற இணையதளங்களில் தொடர்பு விவரங்களை வழங்குவதற்குப் பயனர்கள் பெரிதும் தயங்குவதே இல்லை என மற்ற ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. போட்டியில் பங்கேற்பதற்காகத் தகவல்களை வழங்குவதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். எனவே தரவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த தெளிவான விளக்கத்தை வழங்குவதையும் ஆன்லைன் செயல்பாடுகளைப் பயனர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் நிர்வகிக்க எளிதான கட்டுப்பாடுகளை வழங்குவதையும் உறுதிப்படுத்துவது Google போன்ற நிறுவனங்களின் பொறுப்பாகும்.
"பயனர்கள் புரிந்துகொள்ளும் முறையில் அவர்களுக்கு இதை விளக்குவதே எங்களின் பணியாகும்."
ஆர்ன தெ போயி
தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பில் உள்ள நீங்கள் இதிலிருந்து என்னென்ன முடிவுகளை எடுக்கிறீர்கள், ஸ்டீஃபன் மிக்லிட்ஸ்?
மிக்லிட்ஸ்: பயனர்களுக்கு அவர்களின் சொந்தத் தரவின் மீது கட்டுப்பாட்டை வழங்கும் சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். பிரச்சனை வரும் வரை தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்துப் பயனர்கள் கவலைப்படுவதில்லை. பயனரின் கணக்கு ஹேக் செய்யப்படுவது, ஏதேனும் தீய செயல்கள் நடந்துள்ளதாகச் செய்திகளில் படித்துத் தெரிந்துகொள்வது போன்றவற்றைப் பிரச்சனைக்கான உதாரணமாகக் கூறலாம். இந்தச் சூழல்களில் பயனர்கள் தங்களின் ஆன்லைன் செயல்பாடுகளை எவ்வாறு சரிபார்ப்பது என்பதையும், தேவைப்பட்டால் கடவுச்சொற்களை எப்படி மாற்றுவது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தெ போயி: காலை எழுந்தவுடன் “எனது Google கணக்கில் இப்போது தனியுரிமை அமைப்புகளைச் சரிபார்க்கப் போகிறேன்” என எவரும் நினைக்கமாட்டார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. அது அப்படியான ஒரு விஷயமும் இல்லை. நம்மில் பெரும்பாலானோர் கடைசியாகப் பார்த்துக்கொள்ளலாம் என ஒதுக்கும் விஷயங்களில் தரவுத் தனியுரிமையும் பாதுகாப்பும் ஒன்று. இதனால்தான் கடந்த சில வருடங்களாக, பயனர்களைத் தங்களின் அமைப்புகளை அவ்வப்போது சரிபார்க்குமாறு கேட்கிறோம்.
சிறந்த தயாரிப்புகளை உருவாக்க உதவும் புள்ளிவிவரங்களை உண்மையில் எவ்வாறு பெறுகிறீர்கள்?
தெ போயி: பல்வேறு வழிகள் உள்ளன. பயனர்கள் ஆப்ஸை (எ.கா. Google கணக்கு) எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்ய ஆன்லைன் கருத்துக்கணிப்புகள் சிறந்தவை. கருத்துகளையும் உணர்வுகளையும் ஆய்வு செய்கிறீர்கள் எனில் நேரடியாகப் பயனர்களை நேர்காணல்கள் செய்வது நல்லது. கலாச்சார மாறுபாடுகள் குறித்து மேலும் அறிய வீதிகள், மார்க்கெட்டிங் ஆராய்ச்சிக்கான ஸ்டூடியோக்கள், பயனர்களின் வீடுகள் என உலகம் முழுவதிலும் கருத்துக்கணிப்புகளைச் செய்கிறோம். குறிப்பாக, பயனர்களின் வீட்டில் கருத்துக்கணிப்பைச் செய்வது சுவாரசியமானது. ஏனெனில் அங்கு பயனர்கள் தங்களுக்குச் சொந்தமான சாதனங்களையும் தரவையும் பயன்படுத்தலாம், இதனால் பயனரின் கருத்தை இன்னும் நம்பகமாகப் பெறலாம்.
ஏதேனும் உதாரணம் கூற முடியுமா?
தெ போயி: ஒருமுறை எனது சக பணியாளர்களில் சிலர், ஜப்பானில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் Google கணக்கு குறித்துப் பேச அவரின் வீட்டிற்குச் சென்றனர். அந்தச் சேவை குறித்து அவருக்குத் தெரியவில்லை, கணக்கைத் தொடங்கியதும் உடனடியாக அவர் கம்ப்யூட்டரைத் தன்னை நோக்கி முழுவதும் திருப்பிக்கொண்டார். ஆனால் Google கணக்கு எவ்வாறு செயல்படுகிறது, தகவல்களை அவர் எவ்வாறு நீக்கலாம், தரவை Google பயன்படுத்தும் விதத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.
ஸ்டீஃபன் மிக்லிட்ஸ், இதுபோன்ற நேர்காணல்களை நீங்களும் செய்துள்ளீர்களா?
மிக்லிட்ஸ்: ஆம்! உதாரணத்திற்கு, தற்போதைய Google கணக்கை நாங்கள் புரோட்டோடைப் செய்தபோது பயனர்களை அதைப் பயன்படுத்திப் பார்க்கச் செய்து அவர்களின் கருத்தைப் பெற விரும்பினோம். பரிசோதனையில் பங்கேற்ற முதல் நபர், பக்கத்தைத் திறந்து எதுவும் செய்யாமல் நீண்டநேரம் திரையைப் பார்த்துக்கொண்டே இருந்தார். பிறகு இரண்டாவது நபரும் அவ்வாறே செய்தார். “சரி, இது நான் எதிர்பார்த்தவாறு இருக்கப் போவதில்லை” என நினைத்தேன். அந்தப் பயனர்கள் Google Dashboardஐப் புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
"உருவாக்கச் செயல்முறையில் பயனர் அனுபவ ஆராய்ச்சி முக்கியப் பங்காற்றுகிறது."
ஸ்டீஃபன் மிக்லிட்ஸ்
இதன் விளைவாகப் பயனர் இடைமுகத்தில் மாற்றங்கள் செய்துள்ளீர்களா?
மிக்லிட்ஸ்: பலமுறை செய்துள்ளோம்! தயாரிப்பைப் பயனர்கள் எளிதாக அணுக முடிகின்ற மற்றும் புரிந்துகொள்ள முடிகின்ற வரை தொடர்ந்து இவ்வாறு செய்தோம்.
சேவையில் உண்மையான மேம்பாடுகளைச் செய்ய பயனர் அனுபவம் தொடர்பான ஆராய்ச்சி உதவியுள்ளதா?
மிக்லிட்ஸ்: உருவாக்கச் செயல்முறையில் இது முக்கியப் பங்காற்றுகிறது. உதாரணத்திற்கு, Inactive Account Manager அம்சம் தொடர்பாக நாங்கள் பணியாற்றியபோது பயனுள்ளதாக இருந்தது. இந்த அம்சம் இப்போது Google கணக்கின் அங்கமாக உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குச் செயலில் இல்லாத பட்சத்தில் கணக்குத் தரவை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பயனர்கள் தீர்மானிக்க இது உதவுகிறது. இந்தத் தயாரிப்பு முற்றிலும் புதியது; இது போன்றதை எங்களின் போட்டியாளர்கள் எவரும் இதுவரை அறிமுகப்படுத்தியதில்லை. எனவே அதன் புரோட்டோடைப்பை உருவாக்கி, பரிசோதனை செய்து, இரண்டாவது புரோட்டோடைப்பை உருவாக்கினோம். பயனர்களின் கைகளில் தயாரிப்பை முழுவதும் கிடைக்கச் செய்வதற்கு முன்பு பலமுறை பரிசோதித்தோம்.
உங்கள் ஆராய்ச்சி உண்மையான மாற்றங்களை ஏற்படுத்தும்போது மிகுந்த மனநிறைவைத் தரும்.
தெ போயி: அதுதான் இந்தப் பணியில் உள்ள நல்ல விஷயம். பயனர்களின் தேவைகளை நாங்கள் அறிந்துகொள்வதை உறுதிப்படுத்துகிறோம்.
படங்கள்: கோனி மிர்பாக்
இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள்
உலகில் வேறு எவரையும்விட ஆன்லைனில் அதிகமானோரைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
மேலும் அறிக